’சேக்கிழார் அடிப்பொடி’ என்றழைக் கப்படும் முதுமுனைவர் டி.என்.ராமச்சந்திரன், தமிழ் அறிஞர்களுள் முக்கியமானவர். தஞ்சை மாவட் டத்திலுள்ள திருவலம் என்னும் ஊரில் பிறந்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணி செய்தவர். தனது மணிவிழாவில் 7 நூல்களை வெளியிட்ட பெருமைக் குரியவர். பாரதியின் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர். அதற்காக ‘வானவில் பண்பாட்டு மையம்’ வழங்கும் ‘பாரதி விருது’ பெறுவதற்காக சென்னைக்கு வந்திருந்த அவரோடு உரையாடி யதிலிருந்து…

பாரதியார் கவிதைகளை ஆங்கிலத் தில் மொழி பெயர்க்கும் ஆர்வம் வந்தது பற்றி சொல்லுங்களேன்…

எனக்குப் படிக்கிற காலத்திலேயே ஆங்கில இலக்கியத்தின்மேல் ஈர்ப்பு உண்டு. மேலும், நான் படித்த ஷேக்ஸ்பியர், ஷெல்லி, மில்டன் நூல்களும் பாரதியின் கவிதைகளை மொழிபெயர்க்கிற மொழியாளுமையை எனக்குத் தந்தன. ‘புகப்புக இன்பமடா போதெல்லாம்…’என்று பாரதியார் சொன்னதை, அவரது கவிதைகளை மொழிபெயர்க்கும்போது நான் முழுமையாய் உணர்ந்து கொண்டேன்.

இன்றைக்கு வழக்கொழிந்து போன ஏராளமான சொற்களையுடைய பாரதியார் கவிதைகளை ஆங்கிலத் தில் மொழிபெயர்க்கையில் எவ்வகை யான சவால்களை எதிர்கொண் டீர்கள்?

அதனை சவால் என்று சொல்வதைவிட, மிகப் பெரிய கவிதை இன்பம் என்றே சொல்வேன். நமக்குள்ள போதாமையால் பாரதியை, அவர் சொல்லும் கருத்தினை நாம் முழுமையாய் கொண்டு சேர்க்காதவர்களாய் இருக்கிறோம். பாரதியின் கவிதைகளிலுள்ள எளிமைதான் மொழிபெயர்ப்பாளனுக்கு மிகுந்த சவாலானது. இதுவரை பாரதி கவிதைகளை மொழிபெயர்த்துள்ள பலரும் அவர் ஒரே வார்த்தையில் சொன்ன ஒரு சொல்லை இரு வார்த்தைகளில் மொழிபெயர்த்துள்ளனர். நான் பலமுறை முயன்று, பல நூல்களை வாசித்து ஒரே சொல்லையே பயன்படுத்தியுள்ளேன். உதாரணமாக, ‘ஏற்றநீர்ப் பாட்டின் இசைகளிலும்…’ என்று பாரதியின் குயில்பாட்டில் வருகிற ‘ஏற்றம்’ என்னும் சொல்லை ‘SHADOOF‘ என்று ஒரே சொல்லில் நான் மொழிபெயர்த்திருக்கிறேன்.

ஆங்கிலத்தில் மொழிபெயர்க்காத தால்தான் வங்கக்கவிஞர் தாகூருக்கு கிடைத்ததுபோல், நம் பாரதிக்கு நோபல் பரிசு கிடைக்காமல்போனது என்று சொல்லப்படுவது குறித்து…

பாரதியின் பெருமையையும், அவரது கவிமேதமையையும் உணர்ந்து அவரை நாம் கொண்டாட தவறிவிட்டோம். ஐரீஷ் கவிஞர் யேட்ஸ் பெயர் நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டபோது, அவர்தான், “என்னைவிட பெரிய கவிஞர் ஒருவர் இருக்கிறார்” என தாகூரை அடையாளம் காட்டினார். தமிழில் பாரதியை அவ்வாறு சுட்டிக்காட்ட யாருமில்லை. அதனாலேயே அந்த மகாகவி தமிழகத்தைத் தாண்டி போக முடியாமல் போனது. பாரதியை வெறும் சொற்பொழிவாக கொண்டு செல்வதைவிட, அவரைப் பற்றிய, அவரது படைப்புகள் குறித்து வகுப்புகள் நடத்திட வேண்டும். அதுவே இன்றைய தலைமுறையினரிடம் பாரதியைக் கொண்டு சேர்க்கும் வழியாகும்.