Mahakavi Bharati’s Vinayakar Nanmanimalai- Dr.TNR’s Translation Comments by Dr.T.R.Suresh

நெடுங்கவிகள் நான்கு

மஹாகவி பாரதியார்

Four Long Poems of Bharati

சேக்கிழார் அடிப்பொடி

முதுமுனைவர் T N ராமச்சந்திரன்

         குறிப்புரை

மரு.த.ரா.சுரேஷ்

     முதலுரை

          ‘சீர் அவிரும் சுடர்மீனொடு வானத்துத் திங்களையும் சமைத்தே ஓர் அழகாக விழுங்கிடும் உள்ளமும், அங்ஙனம் உண்டதைக் கவிதைக் கனலாக உமிழும் வல்லபமும் படைத்தவன் எவனோ அவனே கவிஞன்’— சொன்னவர் இவர்தான். ஏனையோர் வெறும் பாடலாசிரியர்கள்.

கவிதை என்பது நற்பொருளும் சொற்செறிவும் யாப்பமைதியும் ஒலியின்பமும் தன்னில் கொண்டிருக்க வேண்டும். வசன வரிகளை உடைத்து அளவு குறைத்து அத்துண்டுகளை ஒன்றன் கீழ் ஒன்றாக அடுக்கி வைப்பது கவிதையாகாது.  இக்கண்கொண்டு நோக்கின் இன்றைய ‘கவிதை’களில் நூற்றுக்கொன்று தேறுவதும் அரிது. தமிழின் சீரழிந்த இன்றைய நிலை இது!

“யாருடைய கவிதையில் கற்பனை சக்தியும் கவிதை இன்பமும் உலகில் வற்றாத லீலைகளும் ஆழ்ந்த அத்யாத்ம அனுபவமும் வாழ்வின் சிக்கல்களுக்குச் சமாதானமும் தென்படுகின்றதோ அவனே மஹாகவியாவான்” என்று பாரதியை மஹாகவியாகப் போற்றிய         ந. பிச்சமூர்த்தி கூறியுள்ளார்.

“ஒரு கவிஞன் தனது கவிதையின் மூலத்தையே நமக்கு உணர்த்திவிட முடியுமா என்பது சந்தேகம்.  ஏனெனில், கவிதையில் கவிஞன் நமக்கு வழங்குவதெல்லாம் சிருஷ்டி பரவசத்தின் கணநேரக் களிமயக்கில், தனது உள்ளொளியில் அவன் கண்ட திருக்காட்சியின் தித்திப்பைப் பற்றிய சேதியே தவிர, அந்தக் காட்சியையே அவன் நமக்கு வழங்கி விடுவதில்லை.  ஏனெனில் அது அவனுக்கே மறந்துவிட்ட ஒரு கனவு.  எனவே, கவியின் மூலஸ்தானத்தை ஒரு விமர்சகன் போய் எட்டிப் பார்த்துவிட முடியும் என்பது நடவாத காரியம்.”  இதை இவர் சொல்லி ஆண்டுகள் நாற்பதுக்கு மேல் ஆகிவிட்டன!

விமர்சகன் மட்டுமல்ல, மொழிமாற்றம் செய்பவர் நிலையும் அதேதான்!

கவிதையிலே கவிதைதான் இருக்கும்.  ரஸனை என்பதோ கவி உள்ளத்தில் இருப்பது.  “உன்னிடம் கவிதை இல்லையென்றால் நீ எங்குமே கவிதையைக் காண வியலாது” என்பது இவர்தம் ஞானபிதா கவிஞர் திருலோக சீதாராமின் கூற்று.  இஃது உலகெங்கும் இலக்கிய அறிஞர்கள் ஒப்புரைத்தது.  இவரிடம் கவியுளம் விளங்குகின்றது.  அதனால்தான் இவர் மஹாகவியின் கவியுளத்தை உணரும் பேறு பெற்று விளங்குகின்றார்.

“பாரதி எனக்குப் புரியவில்லை” என்ற தலைப்பில் மஹாகவி நூற்றாண்டு விழாவொன்றில் முப்பதாண்டுகட்கு முன் இவர் பேசினார்.  அவர் புரியவில்லை என்று வினாக்களுக்கு விடையிறுப்பவர் இன்றுவரை இல்லை.  “ஆழ்ந்திருக்கும் கவியுளம் காண்கிலார்” என்பது மஹாகவியே கூறிவிட்ட நிதர்சனம்.  சாக்ரடீஸ் கூறியது போல, இவரும் ‘புரியவில்லை” என்று மன்றிடை மொழிந்து விட்டார்.  ஏனையோர் அவ்வுண்மையை வெளிப்படையாகக் கூறவுமில்லை; ஏன், தாம் புரிந்து கொள்ளாததை உணரவும் கூட இல்லை!

“சங்கத் தமிழ்தான் புரியாதது; இக்காலத் தமிழ் ஒன்றுமேயில்லை” என்போரைத் திணறடிப்பது மஹாகவியின் ‘எளிய’ தமிழ்.  மஹாகவி பாடல்களை அறிந்துணர்ந்து அதிசயித்து அனுபவிக்க தக்க வழிகாட்டி வேண்டும்.  இன்றேல் நாம் திக்குத் தெரியாத காட்டில் பொருள் தேடித் தேடி இளைப்போமே!

மஹாகவிக்குப் பாங்கான, கவியுளம் காட்டும், உட்பொருள் வெளிப்படுத்தும் உரை இல்லை.  ஆயின் தம் மொழிபெயர்ப்பால் இவர் அதைப் பெருமளவு நிறைவேற்றியுள்ளார்.  மேலும், மூலமொழி அறியாதோர் (இக்காலத் ‘தமிழர்’-இல் பெரும் எண்ணிக்கையினர் அப்படித்தான்!) மஹாகவியின் கவிதையின்பத்தை நுகர இவர் மொழிபெயர்ப்பு பெரிதும் உதவுகின்றது.

          பாழையும் ஊழையும் பண்ணில் பிசைந்து தந்துள்ளான் மஹாகவி.  (அமர கவிஞர்களை ஒருமையில் அழைப்பது தமிழ் வழக்கம்.  ‘அவர், இவர்’ என்றழைத்தால் அமரத்துவம் இன்னும் எய்தவில்லை என்பதம் பெருமளவு  உறுதி!)  தமிழ்க் கவியுலகில், ஏன் உலக இலக்கியத்தில், தனக்கேயுரிய தனியிடம் பெற்றுத் திகழ்பவன் மஹாகவி— இந்நூலாசிரியரின் ஞானகுருவுக்கு ஞானபிதா.  மஹாகவியின் முப்பெரும் பாடல்களோடு முதல் வணக்கத்துக்கு என்றுமே உரிய வேழமுகத்தோன் பற்றிய விநாயகர் நான்மணி மாலையையும் சேர்த்து ஆங்கிலத்தில் இவர் ஆக்கித் தந்திருப்பதே நம்முன் இன்றுள்ள இந்நூல்.

பொதுவாக அனைவரும் புரிந்து கொண்டிருக்கின்ற முறையில் நான் ஓர் எழுத்தாளனாகவோ திறனாய்வாளனாகவோ இல்லாமல், இந்நூலைப் பன்முறை பன்னிப் பன்னிப் படித்துப் பார்த்துப் பதிப்பித்ததால் இதன் மீது காதல் கூர்ந்து களித்தவன் என்னும் நம்பிக்கையிலேதான் இது பற்றிப் பாராட்டுரை படிக்கும் வாய்ப்பு எனக்கு வழங்கப்பட்டிருக்கின்றது என்றே நான் கொள்கின்றேன்.

இப்பாராட்டுரை இவர்தம் ஆக்கத்தைத் துலக்கு முகமாகவே பெரிதும் அமைந்துள்ளது.

உலகின் தலைசிறந்த விஞ்ஞானி ஈசாக் நியூட்டன் (Isaac Newton) கூறியது போல, ‘உலகுக்கு நான் எப்படித் தெரிகின்றேனோ யான் அறியேன்.  ஆயின் எனக்குத் தெரிந்தவரை நான் இவ்வாறுதான்: கடற்கரையில் விளையாடும்போது இன்னும் சற்றே வழுவழுப்பான ஒரு கூழாங்கல்லையோ இன்னும் சற்றே அழகிதான ஒரு கிளிஞ்சலையோ கண்டெடுத்து உளமகிழும் சிறுவன் ஒருவன் போன்றே யான் உளேன்.  உண்மையெனும் பெருங்கடலோ நான் ஏதும் அறியக் கூடாமல் என் முன்னே விரிந்து பரந்திருக்கின்றது.’

இந்நூலிலுள்ள எண்ணற்ற முத்துக்களில், ரத்தினங்களில், மாணிக்கங்களில் எதை எடுப்பது?  எப்படிக் கோப்பது?

‘படிப்போர் பலர், பயில்வோர் சிலர்.  பயில்வோர் பலர், கற்போர் சிலர். கற்போர் பலர், அறிவோர் சிலர்.  அறிவோர் பலர், உணர்வோர் சிலர்.’  ஆங்கிலத்தில் இதைச் சொல்வதானால், ‘Many read, few study.  Many study, few learn.  Many learn, few understand.  Many understand, few realize.’  (சொன்னவன் நான்தான்!)  இந்நூலைப் படிப்போருக்கு இக்குறிப்புகள் உதவுமென்று நான் நம்புகின்றேன். குறைந்தபட்சம் இதில் நான் துய்த்த இன்பத்தை மற்றவரோடு பகிர்ந்து கொள்ளவாவது இக்குறிப்புகள் துணை நிற்கக்கூடும்.

தாதையின் நூல்களின் மீள்பதிப்பை மேற்கொள்ளும் பெரும்பேற்றை எய்துவோர் மிகச் சிலரே.  இவ்விஷயத்தில் எனக்கு நல்லூழ் முகிழ்த்த காரணம் என் முற்பிறப்பு நல்வினையும் பெரியோர்தம் நல்லாசியுமே என்பது என் உறுதி.

இம்மொழிபெயர்ப்பை மீண்டும் மீண்டும் பயிலும்போது மீண்டும் மீண்டும் எனையுற்ற விம்மிதமும், விஞ்சிய விஸ்மயமும் நான் விரித்துக் கூற வேண்டுவதில்லை.  என்னிலும் மீக்குயர்ந்த அறிஞரும் சான்றோரும் பலர் எனக்கு முன்னமே பன்முறை அதனை ஆற்றியுள்ளனர்.  இந்நூலின் கண்ணும் ஆங்காங்கே அது பதிவாகியுள்ளது.  எனக்கு இயன்றது, இப்பெரும் முயற்சியில் இறைத் தூண்டலால் இவரிடம் அமைந்துள்ள வீறார்ந்து எழுந்த துணிவையும் அருட்திறனையும் கண்டு அதிசயிப்பதே ஆகும்.

“ஒரு நூலானது ஓரிரண்டு ஆண்டுகள் மட்டுமே தமிழ் நூற்பழக்கம் உள்ளோரும் உணர்ந்து கொள்ளுமாறு இருக்க வேண்டும்” என்பது பாஞ்சாலி சபதம் – முன்னுரை-இல் மஹாகவி கூறுவது.  ஆயின் அவர்தம் சொல்லாட்சியோ பன்முறை பொருள்தேட வேண்டுவது.  சொற்பொருள் தாண்டி கருத்துக் காண வேண்டின் உட்பொருள் உணர்த்தும் உரையாசிரியரின் உதவியின்றி நூலைக் காண்பது கடலைக் கையால் கடத்தல் போன்றது.

தமிழராய்ப் பிறந்தோர் தமிழ் அறிதல் சிறிது; தமிழ் உணர்தல் அரிது என்னும் பொதுநிலையில் ஆங்கிலம் அறிவோர் பலரெனும் நடைநிலையில் மொழிபெயர்ப்பு பொருளை ஒருவாறு காட்டும் எனும் நம்பிக்கை நியாயமானதுதான்.  அவ்வகையில் T N R என்று அன்பரும் அறிவரும் அகமகிழ்ந்து அழைக்கும் சேக்கிழார் அடிப்பொடி முதுமுனைவர் தி. ந. இராமச்சந்திரன் ஆற்றியிருக்கும் Four Long Poems of Bharati எனும் இம் மொழிபெயர்ப்பு நூல் மஹாகவி போற்றிகள் அனைவரும் வரவேற்றற்குரியது.

ஆயின் இவர் நடை, சொல்லாட்சி முதலியன ஆங்கிலப் பயிற்சி உடையோர்க்கும் பெருமுயற்சி வேண்டுவன. மேலும், இவர்தம் மொழிபெயர்ப்பின் சிறப்புகள் பலவற்றுள் காட்டுகள் சிலவற்றையேனும் முன்னிறுத்துவது மூலத்தையும் இவர் மொழிபெயர்ப்பையும் மஹாகவி பக்தர்கள் நன்கு அனுபவித்து இன்பு பெறுதலும் ஒன்றையொன்று இனிது உணர்தலும் இயலுமாறு செய்யும்.  குறிப்புரை எழுதும் இம்முயற்சி நான் தொடங்க இவையே முதற்காரணங்களாம்.

தமிழ்ப் பெரும்பயிற்சியோ மஹாகவி ஆய்வாளன் எனும் நற்றகுதியோ அற்றவன் எனும் நிலையில் எத்துணையும் திறனில்லாது ஈங்கு எத்தனித்தல் எங்ஙனம் சாலும் எனின்,

முதற்கண் இவர் புதல்வனாய்ப் பிறக்கும் பெரும்பேறு உறும்ஊழால் சிறுவயது முதலே மஹாகவி ஆக்கமும் பிறர்தரு நூல்களும் செவிவழியும் காட்சிவழியும் பின் பயில்வழியும் அடையப் பெற்றவன் யான்.

அடுத்து, இவர் நூலை மீள்பதிப்பு செய்யுங்கால் பன்முறையும் பலகாலும் இதைக் கூர்ந்தும் ஆய்ந்தும் பயின்றும் படிக்கும் வாய்ப்பு அமைந்ததும் இதன் நுட்பங்கள் பலவும் எனக்கு வெளிச்சமாகச் செய்தது.  ‘இலக்கிய இன்பமும் பகிர்ந்திடப் பெருகுமே’ எனும் பொன்மொழி ஈண்டு முன்மொழியாய் நின்றது.  “ஆசை பற்றி அறையலுற்றேன்” என்றனர் பெரியரும்.  எனின் அவர்வழி சற்றே சிறுநடை இடுதலும் வழுவன்று இதில் என்று துணிந்தனன் யானே என்பதே மெய்.

நயங்களை நவிலலும் பயன்தரு வகைநிரை உடன்வர உரைத்தலே உயர்வழி எனல்சரி ஆகையால் இவர்தம் அருஞ்சிறப்புகளை வகை ஏழு என வைத்து ஈங்கு தந்துள்ளேன்.

சொல்லாட்சியின் உயர்சிறப்பு, அருஞ்சொல் ஆட்சி — பழஞ்சொல் மீட்சி — புதுச்சொல் ஆக்கி — புதுப்பொருள் ஊக்கி, மஹாகவிக்கு மொழிபெயர்ப்பால் உரை, மொழிபெயர்ப்பின் உயர்சிறப்பு, குறிப்பு காட்டும் சிறப்பு, பேரிலக்கிய எதிரொலிகள், கவிநயம் காட்டும் ஒலிநயம் என்பன அத்தலைப்புகள்.  இவ்வகைப்பாட்டின் விவரங்களைக் கீழே காணலாம்.

சிறப்புகள் அனைத்தையும் குறைப்பெதும் இன்றி உறைப்புடன் உரைத்தல் நெடும்பணி சான்றது, கடுமுயற்சி வேண்டுவது.  இயன்றதை  இவற்றுளே இயம்பினன் யானே.  சில்லிடம் தவிர்த்துப் பெற்றவர் துணையெதும் உற்றதும் அற்றதால் குற்றமும் என்னவை; மற்றவை பெற்றவை!

 

சொல்லாட்சி நயம்

மொழிபெயர்ப்பு என்பது மூலத்தைச் சொல்லுக்குச் சொல் வேற்றுமொழிக்கு மாற்றுவது, தருமொழியின் கருத்தைப் பெறுமொழியில் ஏற்றுவது என்பதோடு முடிவதன்று.  மொழிபெயர்ப்பிலும் சொல்லும் நடையும் அழகுடனும் கவிதை எழிலுடனும் அமைந்திருத்தலே நல்ல ஆக்கத்தின் அடையாளம்.  மஹாகவிக்குப் பணி உதவிய பேரறிஞர் கோபாலகிருஷ்ணன் ஆங்கில உயர்கவிகளைத் தமிழில் மொழிபெயர்த்தார்.  அவற்றைக் கண்ணுற்ற மொழிபெயர்ப்பின் உயர் செம்மலாம் ஜி.யூ. போப் ‘மூலத்தை நான் அறிந்திராவிட்டால் இவ்வாக்கங்களை மூலப்படைப்பென்றே எண்ணியிருப்பேன்’ என்று போற்றினார்.  சிறந்த மொழிபெயர்ப்பானது தனிமூலத்தைப் படிக்கும் உணர்வை உண்டாக்க வேண்டும்.  அதற்கு அதில் சொற்கள் ஆளப்படும் முறை முகைமையானது.  இவரிடம் அத்திறம் மிக்குக் காணப்படுவது.  அதற்குப் பல எடுத்துக்காட்டுகளை இந்நூலில் காணலாம்.

 

அருஞ்சொல் ஆட்சி – பழஞ்சொல் மீட்சி –           சொற்களின்  வாழ்வு நீட்சி

மந்திரம் போல் வேண்டுமடா சொல்லின்பம்! 

எனின், அவ்வின்பத்தை வாரி வழங்கும் உயர் சால்பு மிக்க வள்ளல், ஏன், மந்திரவாதி, இவர்!

சொல்லெடுத்து சூக்குமத்தில் விட்டெறிந்து சுட்ட பழம் உதிர்கின்ற’ வித்தகம் படைத்த அரும்புலவர் கூட்டத்துள், இன்று அருகி வரும் அறிஞர்களுள், தலையாய ஒருவர் இவர். காண்டறிய சொற்களை மீண்டும் காணத் தருவது இவருக்கொரு சிறப்பியல்பு, இவரது தனித்திறன்.  கேட்டறியாச் சொற்கள், காண்டரிய சொற்கள், அறிவரிய சொற்கள், மீள்கேட்பு வாய்ப்பில்லாச் சொற்கள் பற்பல இவர் எழுத்துக்களில் சகஜம். இவர் ஒரு பழஞ்சொற் புதையல்; அருஞ்சொற் களஞ்சியம். அரிதிலும் அரிய சொற்களை அழகுற ஆண்டு வரும் இவரை நாம் ‘சொற்பதம் கடந்த புலவோன்’ என்றே அழைக்கலாம்.

புதியன, பழையன, வெகுஜன, அரியன— அனைத்துச் சொற்களையும் பயிலுதல் நமக்கு அவசியம்.  என்னை? பின்வரும் அடிகளைக் நோக்குங்கள்:

‘… … … Words strain,

Crack and sometimes break, under the burden,

Under the tension, slip, slide, perish,

Decay with imprecision, will not stay in place,

Will not stand still’                —(T.S. Eliot, Four Quartets)

சொற்கள் நெரிகின்றன,

பிளக்கின்றன, சிலபோது உடைகின்றன,

சுமை தாங்காமல், இறுக்கத்தில், அழுத்தத்தில் முடியாமல், வழுக்குகின்றன, சரிகின்றன, மடிகின்றன,

துல்லியம் கெட்டு மக்கிப் போகின்றன,

தம் இடத்தில் தங்கி நிற்பதில்லை,

அலைவின்றி அவை அமைவதில்லை. —தராசு மொழிபெயர்ப்பு

சொற்களின் வாழ்க்கையைப் பற்றி டி.எஸ். எலியட் (TS Eliot) கூறிய இதை இவர் பன்னிப் பன்னிக் கூறுவார்.

 

மொழி மட்டுமன்று, சொற்களும் மாறிக்கொண்டேதான் இருக்கும்.

For last year’s words belong to last year’s language

And next year’s words await another voice. (T.S. Eliot, Four Quartets)

‘ஏனெனில், சென்ற ஆண்டின் சொற்கள்

முடிந்த ஆண்டின் மொழிக்குரியன ;

வரும் ஆண்டின் சொற்களோ

வேறோர் குரல் நோக்கிக் காத்திருப்பன.    —தராசு மொழிபெயர்ப்பு  

ஏனெனில்,

பழையன கழிதலும் புதியன புகுதலும்

வழுவல கால வகையி னானே

என்று பவணந்தி அடிகளின் நன்னூல்-உம்  கூறுகின்றதன்றோ?

 

இவர்தம் ஞானத் தந்தையாம் கவிஞர் திருலோக சீதாராம் கூறியுள்ளார்:

‘சொற்களின் வரலாறு ஆச்சரியமானது.  அவை நம்மினும் மூத்தவை.  நமக்கு முன் இங்கு வாழ வந்துற்ற கோடானுகோடி மக்கள் அவற்றைப் பன்னெடுங் காலமாய் உச்சரித்திருக்கின்றார்கள்.  அவர்களுடைய ஆசாபாசங்கள், வெற்றிவீழ்ச்சிகள், இன்பதுன்பங்களெல்லாம் சொற்களைச் சுற்றிப் படர்ந்து அவற்றிற்கு அழுத்தமும் ஆழமும் கனமும் உயிர்ப்பும் ஊட்டியிருக்கின்றன.  ஆகவே சொல்லும் பொருளும் ஒன்றையொன்று கவிந்தும் ஒன்றிலொன்று கரந்தும் ஒன்றிலொன்று புதைந்தும் இரண்டறக் கிடைக்கின்றன.  சொற்களே எண்ணங்களின் சிறகுகள்.  பொருள் சொல்லை விளைக்கும்; சொல் பொருளை உமிழும்.

 

நமக்குண்டானது போலவே சொற்களுக்கும் அக, புற வாழ்வு உண்டு.  கணந்தோறும் நாம் குதப்புகின்ற சொற்களிலே அவற்றின் புறவாழ்வு மட்டுமே தோன்றும்.  ஆழ்ந்த எண்ணங்களைச் சுமந்து வரும் கவிதையிலே அவற்றின் அகவாழ்வு மிளிரும்.

சொற்களின் மர்மங்களை உணர்ந்த கவிஞர்கள்தாம் சொல்லுக்கடங்காத இன்பங்களைச் சுட்டிக்காட்ட அச்சொற்களுக்கு ஆணையிட வல்லவர்கள்.  அத்தகைய ஆற்றலர்களது ஆணையைச் சிரமேற் தாங்கித் தாளம் தவறாமல் சொற்கள் ஆடி வருகின்ற நடனமே கவிதை.

கடவுள், கவிதை என்பன இரு சொற்களே.  ஆனால் சொல்லின் வளமெல்லாம் முறுகுற்று கசிவந்த தித்திப்பே கவிதையென்றால் சொல்லின் திறம் ஓய்ந்த மோனத் திருக்காட்சியே கடவுள்.

கவிதை வேறு, செய்யுள் வேறு.  செய்யுள் என்பது கவிதாதேவி பவனி வருகின்ற சிங்காரத் தேர்.  தேரே தேவியாகிவிடுமா?  தேரில் பவனி வரும் கவிதை தரையில் இரங்கி நடந்தும் வரலாம்தானே?  அது போல, உரைநடையிலும் கவிதை பளிச்சிடலாம்.’

‘மந்திரம் போல் வேண்டுமடா சொல்லின்பம்’ என்பது மஹாகவி வாக்கு. மந்திரங்கள் மாற்றி வைக்க முடியாதவை.  சொல்லின்பம் எய்த வேண்டுமாயின், கையாளும் சொற்களும் வேறு வைக்க முடியாதவையாக இருந்தாக வேண்டும். அவ்வாறு பொருந்தி அமையும் சொற்களாகச் சிறியன, பெரியன, அரியன என்று எல்லாமும் நமக்கு வேண்டும்.   பழைய இலக்கியம் பேரிலக்கியம், செவ்விலக்கியம். எனவேதான்  இன்றும்கூட நல்ல இலக்கியத்துக்குப் பழஞ்சொல் மீட்சி இன்றியமையாதது ஆகும். அது சுவை ஏற்றும், பொருளாழம் கூட்டும். இந்நூலில் பழஞ்சொற்களும் அருஞ்சொற்களும் பரவலாகப் பயின்று வருவதைத் தக்க சில காட்டுகளால் நாம் காணலாம்.

 

***நம் வாழ்வும் முடிவும் உயர்வும் வீழ்ச்சியும் இன்பமும் துன்பமும் எண்ணமும் செயலும் சொற்களோடு பின்னிப் பிணைந்தவை; சொற்களால் ஆனவை; சொற்களால் உணரப்படுபவை; சொற்களால் உணர்த்தப்படுபவை; சொற்களால் பதிவு செய்யப்படுபவை.  சொற்கள் பிறக்கின்றன, வளர்கின்றன, வாழ்கின்றன, திரிகின்றன, தேய்கின்றன, மாய்கின்றன, மறுபிறப்பும் எய்துகின்றன!  சொல்லையும் பொருளையும் பயின்று அறிந்து உணர்ந்து முறையாக ஆண்டால் நம் வாழ்வு வளமுறும்.  எனவேதான் நாம் சொற்களை வணங்கிப் போற்ற வேண்டும்.

 

பாரதிக்கு மொழிபெயர்ப்பால் உரை வளம்         நுண்மான் நுழைபுலத்தான்                     நற்பொருள் நவிலும் நலம்

பாரதி பாடல்களுக்கு மொழிபெயர்ப்புச்

செய்யுள் உரை        

            பாரதிக்குப் பரிமேலழகர் T N R

 

“ஒரு நூலானது ஓரிரண்டு ஆண்டுகள் மட்டுமே தமிழ் நூற்பழக்கம் உள்ளோரும் உணர்ந்து கொள்ளுமாறு இருக்க வேண்டும்” என்பது பாஞ்சாலி சபதம் – முன்னுரை-இல் மஹாகவி கூறுவது.  ஆயின் அவர்தம் சொல்லாட்சியோ பன்முறை பொருள்தேட வேண்டுவது.  சொற்பொருள் தாண்டி கருத்தும் காண வேண்டின் உட்பொருள் உணர்த்தும் உரையாசிரியரின் உதவியின்றி நூலைப் பயில்வது  கடலைக் கையால் கடத்தல் போன்றது.

தமிழராய்ப் பிறந்தோர் இன்று தமிழ் அறிதல் சிறிது; தமிழ் உணர்தல் அரிது என்னும் பொதுநிலையில், ஆங்கிலம் அறிவோர் பலரெனும் நடைநிலையில், மொழிபெயர்ப்பு பொருளை ஒருவாறு காட்டும் எனும் நம்பிக்கை நியாயமானதுதான்.  அவ்வகையில் T N R என்று அன்பரும் அறிவரும் அகமகிழ்ந்து அழைக்கும் சேக்கிழார் அடிப்பொடி முதுமுனைவர் தி. ந. இராமச்சந்திரன் ஆற்றியிருக்கும் Four Long Poems of Bharati எனும் இம் மொழிபெயர்ப்பு நூல் மஹாகவி போற்றிகள் அனைவரும் வரவேற்றற்குரியது.

மூலத்தின் சொற்களும் அடிகளும் அனைத்துமே பொருள் எளிதில் வசப்படுவன ஆகா.  மஹாகவிக்கு உரையென்று இக்காலம் சிலர் எழுதினாலும் அவை தகுதி தாழ்ந்தவை, தெளிவு மங்கியவை, பொருள் மயங்கியவை என்றே பெரிதும் அமைந்துள்ளன.  இந்நிலையில் இவர்தம் மொழிபெயர்ப்பு பல இடங்களிலும் மஹாகவியின் அடிகளுக்குத் தெளிவுரையாக, நல்லுரையாகத் திகழ்ந்து பயில்வோர்க்குப் பொருள் வழிகாட்டியாக விளங்கி உதவுகின்றன.  மஹாகவியின் சில பாடல்களுக்கு மட்டுமே இவர் சிந்தனை உரை என்றொன்று வரைந்துள்ளார்.  பிறவற்றுக்கும் இவர் உரை தரும் வரை இம்மொழிபெயர்ப்பு பேருதவியாகப் பல இடங்களில் திகழ்கின்றது.

குறிப்புகள்

தம் மொழிபெயர்ப்புகளில் கணிசமாகக் குறிப்புகள் வைப்பது இவர் வழக்கம். பலப்பல இடங்களில் இவர் தம் குறிப்புகள் பாடலின் நீட்சியையும் விஞ்சி நிற்பதும் உண்டு!

இதற்கிவர் வைக்கும் நியாயம் வியந்து இன்புறத்தக்கது.  ‘குரான் நூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த R A நிக்கல்சன் என்பார் 97 பக்க நூலுக்கு (அவற்றுள் பல அரைப் பக்கங்கள்) 50 பக்க முன்னுரையும் 32 பக்கங்கள்  பிற்சேர்க்கைகளும் தவிர 121 பக்க நீட்சியுள்ள குறிப்புகளும் வரைந்துள்ளார்!’  அவரையே இவர் தம் ஆதர்சமாகக் கொண்டுள்ளார்.  இவர் தந்துள்ள இந்நூலிலுள்ள குறிப்புகளுக்கான அடைவே 17 பக்க நீட்சியது!

மகாகவியின் ஓரடிக்கு 35 ஒப்பீடுகளும் மற்றோரடிக்கு 21 ஒப்பீடுகளும் தருவது இவருக்குச் சாதாரண விஷயம்.

உபநிடதம் முதல் பிரெஞ்சுப் புரட்சி வரை இவர் தம் குறிப்புகளில் நாம் காணும் வகைகள் அனந்தம்.  வேதம், உபநிடதம், சாங்கரம், வேதாந்தம், அறிவியல், வரலாறு, மெய்யியல், பெரியோர் வாழ்வு, நகையாடல், பாரதி வாழ்வு நிகழ்வுகள், பழமொழிகள், இலக்கிய ஒப்புகளும் மறுப்புகளும் என்றிவையும் இன்னும் பலவும் இவர் தம் குறிப்புகளிற் காணலாம்.

ஏன் குறிப்புரை?  ‘ஆழ்ந்திருக்கும் கவியுளம் காண்கிலார்’ என்றார் மஹாகவி. அடுத்து முயன்றாலும் பலமுறையும் அக்கவியுளம் புறத்தே காணக் கிடைப்பதில்லை. புறத்தே காணும் வரிகளோ பெரிதும் நமக்குப் புரிவதில்லை.  எனவேதான், குறிப்புரை.

 

 மொழிபெயர்ப்பின் உயர் சிறப்பு

              மொழிமாற்றத்தின் உயர் மாட்சி

‘உரைகளும் பொருளாய்வுகளும் மோசமான ஒரு மொழிபெயர்ப்புக்கும் ஈடாகா.  ஏனெனில் மொழிபெயர்ப்பாளர் மூலத்தைச் சார்ந்து நிற்கின்றார்.  ஏனையோர் தம் எழுத்தையே நம்பியுள்ளனர்’ என்பது இவர் கொள்கை. ‘முழுமையான மொழிபெயர்ப்பு என்பது ஓர் இல்பொருள்.  “அதுதான், ஆனால் இன்னமும் கூட” என்பதே மொழிபெயர்ப்பின் என்றுமுள நிலை.

 

மொழிபெயர்ப்பதில் காணும் இடையூறுகள் அனைத்தையும் கடந்து விஞ்சி நிற்பவர் இவர்.  இவர் பற்றி தமிழ்க்கடல் பண்டித                  T V கோபாலையர் ஒரு முறை கூறினார்: “நம்மெல்லாம் ஆங்கிலம் பேசறோம்; TNR பேசறது இங்கிலீஷ்!”

பேராசிரியர் TR குப்புஸ்வாமி “TNR பாரதிக்குப் பரிமேலழகர்; நூல்களின் மீள்படைப்பாளி” என்றுள்ளார். நாற்பது ஆண்டுகட்கும் முன்னர் கும்பகோணத்தில் ஒரு பள்ளியில் இவர் உரையாற்றினார்.  அப்போது அங்கிருந்த ஓர் ஆசிரியர் “நாங்க பேசற இங்கிலீஷ்லாம் is-was, it-that தான்.  நீங்க பேசறதுதான் சார் நிஜமான இங்கிலீஷ்!” என்று வியந்தார்.

 

மஹாகவியின் குயில் பாட்டுக்கு இவர் செய்த மொழிபெயர்ப்புக்கு முன்னுரை அளித்த பேராசிரியர் K R ஸ்ரீநிவாச ஐயங்கார் கூறுவது:

குயில் பாட்டின் மாயா ஜால வினோதம் மொழிபெயர்ப்பில் மிஞ்சுமா?  அதுவும் ஆங்கில மொழிபெயர்ப்பில்?  ஓசை ஜாலமும் சொற்றொடர் மாயமும் சுழன்றெழும் ஒலிநயமும் மறைந்துவிடும் என்பதில் ஐயமின்று.  ஆயினும் கவிதையின் பொருளும் செய்தியும் செம்பாதியேனும் பிடித்து வைக்க இயலும்.  பெரும்பாலான மொழிபெயர்ப்பாளரைத் தாங்கிச் செல்லும் அவா ஆர்வமும் நம்பிக்கையும் இதுவே. T N R நெடிய அனுபவமுள்ள, திறனார்ந்த, அர்ப்பணிப்பு நிறைந்த மொழிபெயர்ப்பாளர் ஆதலால் யாப்பமைந்த வடிவமொன்றைத் துணிவுடன் முயன்றுள்ளார்.  இவர் இட்டுக்கொண்ட பணி எத்துணை செயற்கரியது என்று எண்ணிப் பார்க்கும் போது— அதிலும் குயில் பாட்டு மொழிபெயர்ப்பாளர்களின் துணிவார்வத்தை, தன்னம்பிக்கையை முறிக்கும் தகைத்து— இக்கதையின் இயல் எழிலும் துள்ளலும் மாறாததோடு இதன் (உலகியல் கடந்த) கவிமடமையும் புனைவமைவும் எக்களிப்பும் கூட (மொழி கடந்து) ஈண்டு வந்துள்ளது. (அடைப்புக் குறிகளுள் உள்ளன எம்மன). குயில் பாட்டு ஏனையோராலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஆயினும் T N R-இன் ஆக்கம் அதற்கேயரித்த தனிவேறான முத்திரைகளும் அடுக்கித் திரண்ட தனிச்சிறப்பும் உடைத்து.’

பேராசிரியரின் முன்னுரையினின்று நீண்ட இப்பகுதியை இங்கு வைப்பதன் நோக்கம் உயர் தனிச்சிறப்பான ஓர் இலக்கியப் பேரறிஞரின் வாசகங்கள் இம் மொழிபெயர்ப்பு பற்றி நமக்களிக்கும் தெளிவுக்காகவே.

 

‘கவிதை தன் உள்ளார்ந்த இயல்பினாலேயே மொழிபெயர்க்க ஒண்ணாது’ என்பார் K R ஸ்ரீநிவாஸ ஐயங்கார்.  ஆயின் ‘ஆகாததெல்லம் அவனருளால் ஆகும்’ என்பதே இவர் தம் உறுதி.  அவ்வாறு ஆனதில் கூறு சில ஈண்டு காண்பாம்.

 

பேரிலக்கியக் கூற்றுகள் — நினைவூட்டல்கள்                 எதிரொலிகள்

 

இயற்பியலில் ஒத்ததிர்வு (resonance) எனும் விஷயம் முகைமையானது.  ஒரு பொருளின் அதிர்வலை அதே அதிர்வலை எண்ணுடைய இன்னொரு பொருளில் அதிர்வூட்டும் போது அதிர்வலைப் பெருக்கம் நிகழ்கின்றது.  ஒலியால் இது நேரும் போது பேரொலி விளைகின்றது.  இவ்வியல்நிகழ்ச்சி முதன்முதல் ஒலியியக்கத்தில் காணப்பட்டதால் அவ்வொத்ததிர்வு ஒலிப் பெருக்கத்தை ‘re-sonance, resonance’ என்றனர்.  புவி அதிர்ச்சியிலும் இதற்குப் பங்குண்டு.  உரத்த ஒலி பனிப் பெருஞ்சரிவை உண்டாக்குவதும் இவ்வாறே என்பர் அறிவியலார்.  உயர்ந்த இசை கேட்கும்போதும் சிறந்த கவிதை நம் மனத்தில் பதியும் போதும் செம்மை சால் இலக்கியம் நம்முள் சேரும் போதும் நமக்குண்டாகும் உணர்ச்சி எழுச்சி இதனால் உறுவதே.  ‘வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம்’ உள்ளம் வாடுவதும் இதன் விளைவே.  சிறந்த இலக்கியத்தை நாம் பயில்கையில் முன்பு நாம் பயின்ற செவ்விலக்கியக் கூறுகளை அது தொட்டுத் தூண்டி ஆழ்ந்த நல்லுணர்ச்சியை எழுப்பி நமக்கு நல்லின்பம் நல்குகின்றது.  இலக்கியத் துய்ப்பின் இன்பத்துக்கு முதன்மைத் தோற்றுவாய் இவ் இயல்நிகழ்வேயாகும்.  ஏன், சில திரைப்படப் பாடல்கள் நம்முள் மிக்கு நிற்பதும் நல்லின்பம் ஈட்டுவதும் அவற்றில் செவ்விசை அடிப்படை வெளிப்படையாகவோ கரந்தோ அமைந்திருப்பதால்தான்.  இதனான் நிகழும் ஒத்ததிர்வு நமக்குப் புரியாமலேயே பன்முறையும் நமக்கு மிகுஇன்பமூட்டுகின்றது.  இவர் ஆக்கத்தில் இவ்வியல்நிகழ்வை நாம் உய்த்துணர உள்ள இடங்கள் பலப்பல.  ஆயின் ஒன்று.  இவர் தந்துள்ள தொடர்களும் ஒப்பிணைகளும் நம்முள் நன்கு எதிரொலிக்க நம் இலக்கிய அறிவும் அனுபவமும் சிறந்திருக்க வேண்டும்.  அன்றி மறுதலையாக இவர் காட்டுவனவற்றினின்று செவ்விலக்கியம் பல நாம் தேரலும் இயலும். அவ்வகையில் சிலவற்றை நாம் ஈண்டு காண்பாம்.

 

யாப்பு – ஒலிநயம்

உரைநடையினின்று, அது நல்ல உரைநடையாயினும்கூட, கவிதையைத் தன்மை வேறுபடுத்திக் காட்டும் முகைமையான பண்புகள் சொல்நிரலும் ஒலியழகும் ஆகும்.  பாடக்கூடியது, பாடப்படுவது பாட்டு, கவிதை.  மூலத்தில் காணும் ஒலியழகை மொழிபெயர்ப்பினுள் கடத்திக் கொடுப்பது பெரும்பாலும் இயல்வதன்று.  ஆயினும் மொழிபெயர்ப்பவர் தன் திறனால் மொழிபெயர்ப்பிலும் ஒலியழகைச் சில்லிடங்களிலாவது தருவது கூடுதல் சிறப்பாக அமைவது.  அவ்வகையில் இவராக்கத்திலும் ஒலியழகு பல இடங்களில் காண்பதை நாம் ஈங்கு காணலாம்.

மஹாகவி பாரதி இயற்றிய

விநாயகர் நான்மணி மாலை

TNR மொழிபெயர்ப்பு

 தராசு குறிப்புரை

      சொல்லாட்சி நயம் &           அருஞ்சொல் ஆட்சி

 

1  சக்தி பெரும் பாவாணர்

    valiancy in words

‘சக்தி’: இதை எப்படி ஆங்கிலத்தில் சொல்வது?  energy-யா?  power-ஆ?  strength-ஆ?  இவர் சொல்வதோ, ‘valiancy’. அச்சொல்லிலேயே சக்தியின் எழுச்சியும் பழைய மொழிப் பெருமிதமும் நம்முன் நிற்கக் காண்கின்றோம். இதுவே சொற்பொருத்தம் என்பது.

 

2  நாயேன்

    I , a cur

‘நாயேன்’— ‘A dog I’ என்று செய்தால் பொருந்தாது.  ஏனெனில், மேலை நாட்டு மரபில் நாய் பெரிதும் அன்புக்கும் போற்றுதலுக்கும் உரிய ஒரு விலங்கு.  நாயை அசுத்தம் என்றெண்ணுவது கீழை நாட்டு மரபு.  என்ன செய்யலாம்? இவர் ‘cur’ என்கின்றார். ‘Cur’ என்பது ஆங்கில மரபில் மட்ட நாயைக் குறிக்கும் ஓர் இழிசொல்.  அதைக் கையாண்டு மஹாகவியின் கருத்தைச் சரியாக இவர் ஆங்கிலத்தில் ஏற்றுகின்றார்.

 

2  வாயே திறவாத

    lips sealed in silence

‘வாயே திறவாத’ என்பதை ‘not opening the mouth’, ‘mouth unopened’ என்றெல்லாம் மாற்றினால் சிறக்காது. இவர் தருவது ‘lips sealed in silence’. ‘வாயே’ என்பதிலுள்ள ஏகாரத்தின் அழுத்தத்தை ‘lips sealed’ என்றும் அதன் விளைவை ‘in silence’ என்றும் இவர் நமக்குக் காட்டியுள்ளார்.  ‘Lips sealed in silence’ என்னும் தொடரின் மோனை அழகையும் ஈண்டு நோக்குக.

 

2  தீயே நிகர்த்தொளி

    full effulgent, bright as flame

‘தீயே நிகர்த்தொளி’ என்பதைப் பெரும்பாலோர் ‘light, bright like fire’ என்றுதான் மொழிபெயர்ப்பார்கள்.  இவர், அத்தீயின் ஒளிப்பெருக்கை ‘full effulgent’ என்று கூறி, அவ்வொளி தீயை நிகர்த்திருப்பதை ‘bright as flame’ என்றுள்ளார். ‘Effulgent’ என்பது ‘சோதியான, பேரொளி விடுகின்ற’ என்னும் பொருளதானதோர் அருஞ்சொல்.

‘Fire’ என்பதைக் காட்டிலும் ‘flame’-உக்கு உஷ்ணம் அதிகம்!  அக்கினிக் குஞ்சைப் பாடியவராயிற்றே மஹாகவி!

 

3  செய்யுந் தொழிலுன் தொழிலே காண்

    Work done in sooth is your work

இதை ‘work that I do is your work only’ என்பது ஆங்கிலம்.  ‘Work done in sooth is your work’ என்று இவர் செய்திருப்பது English!  ‘தொழிலே’ என்பதிலுள்ள ஏகாரத்தை ‘in truth’ என்று பொருள்படும் ‘in sooth’ என்று பழஞ்சொல் ஒன்றை ஆண்டு இவர் ஆங்கிலத்துக்கு மாற்றியுள்ளார்.

இன்னும், ‘in sooth’ என்பது ‘உண்மையாகவே, உண்மையாக’ என்றிரு பொருள் நல்குவது.  ‘செய்யுந் தொழில் உண்மையாகவே உன் தொழில்தான்’ என்பது ஒரு பொருள்.  ‘உண்மையாகச் செய்யும் தொழில் உன் தொழிலே ஆகும்’ என்பது இன்னொரு பொருள்.

ஒரு சொல் வைத்து மஹாகவி குறித்த பொருளையும் அத்தோடு ஒப்புள்ள ஆனால் சற்று வேறான வேறு பொருள் ஒன்றையும் காட்டியிருப்பது இவர்தம் சொல்லாட்சித் திறனின் உயர்ச்சி!

 

3  யானை முகனே!

    Thou of Mammoth’s visage!

‘O elephant-faced!’ என்று செய்தால் சிறப்பில்லை.  ஏனெனில் மேலை நாட்டவருக்கு யானை இயக்க நேர்த்தியற்ற தன்மைக்கு அடையாளம்.  ‘Thou of Mammoth’s visage!’ என்று இவர் செய்திருப்பதால் ‘Thou’ என்னும் பழஞ்சொல்லின் கனத்தைத் தருவதோடு, ‘Mammoth’ என்னும் சொல்லால் பொருளை வேறோர் உயர் பரிமாணத்துக்கும் ஏற்றி விடுகின்றார்.  ‘Mammoth’ என்பது யானையிற் பெருவகையினது.  அதற்கு தலைப்பேரெழுத்து வைத்திவர் அச்சொல் சாதாரண யானையை அல்லாது வேழமுகத்தோனையே குறிப்பது என்று உணர்த்தியுள்ளார்.

‘Visage’ என்பது ‘முகம்’ என்னும் பொருள் தருமோர் இலக்கியச்சொல்.  ‘Face’ என்பதற்கும் ‘visage’ என்பதற்கும் இடையே இலக்கிய வாசி மிகுதி.

 

4  பண்ணவர் நாயகன்

    Lord of bards!

‘பண்’ என்றால் ராகம் என்றும் இசைப்பாட்டு என்றும் பொருள்படும்.  அதைப் பாடுவோர் ‘பாணர்’ என்றும் ‘பண்ணவர்’ என்றும் அழைக்கப்பட்டனர்.  அவர்தம் தலைவனை ‘Chief of singers’ எனலாம்.  ஆயின் அது யானைமுகனையும் பண்ணவருள் ஒருவனாக்கிவிடும்.  இஃது இறைவனைப் பற்றியதாகையால் ‘Lord of bards!’ என்கின்றார் இவர்.  ‘பாணன்’ என்னும் பொருளதான ‘bard’ என்னும் பழஞ்சொல் இவ்வடிக்கு கனம் ஏற்றுகின்றது.

 

4  கணபதி தாளைக் கருத்திடை வைப்போம்

    Let us embosom the feet of Ganapati 

இதை ‘keep the feet of Ganapati in the middle of our thoughts’ எனலாம்; ஆயின் அதில் கவிதையில்லை.  இவர் ஒரே சொல்லில் முடித்துவிடுகின்றார்: ’embosom’.  இதன் பொருள் ‘நெஞ்சில் வைத்துக் கொள்ளுதல்’ என்பது.  இவ்வருஞ்சொல்லை நாம் வேறெங்கு காணப் போகிறோம்?

 

4  கட்செவி தன்னைக் கையிலே எடுக்கலாம்

    th’ venomous adder/ Can be held in hand

‘கட்செவி’ என்பது பாம்பைக் குறிக்கும்.  நஞ்சற்ற நாகத்தைக் கையில் எடுப்பது பெருஞ் செயலாகுமா?   எனவே இவர் அதை ‘நஞ்சுள்ள’ என்னும் குறிப்பு புலப்படுமாறு ‘venomous’ என்னும் சொல்லை ஈண்டு சேர்த்துள்ளார்.  ‘பாம்பு’ என்பதை ‘snake, serpent’ என்று ஆக்காமல் ‘adder’ என்றிவர் தந்துள்ளார்.  ஏனெனில், இவ் விரியன் பாம்பு மட்டுமே இங்கிலாந்தில் இயற்கையாகக் காணப்படும் விஷப் பாம்பாகும்.  ‘Adder’ என்றவுடனேயே நச்சுப் பாம்பு ஆங்கிலம் பயின்றோர் மனக்கண்ணில் தோன்றும்.

 

4  நிலை பெற்றோங்கலாம்

    can flourish/ Very well

‘நிலை பெறுதல், ஓங்குதல்’ இரண்டையும் சொல்வதெப்படி?  ‘நிலை பெறுதல்’ என்பதை ‘To stay firmly— ஸ்திரமாய் தங்குதல்; To gain a resting place; to secure peace— துன்பமற்ற நிலையை அடைதல்’ என்று University of Madras Tamil Lexicon கூறும்.  ‘ஓங்குதல்’ என்பதற்கு ‘To grow, rise high, as a tree; to ascend, as a flame; to be lofty, as a building or a mountain—உயர்தல், To spread, extend, expand— பரவுதல், To grow, as a child— வளர்தல், To be exalted, dignified, eminent— பெருமையுறுதல்; To increase in wealth, in renown, in learning; to flourish— பெருகுதல்’ என்று அது பொருள் கூறும்.  ‘செழித்தல்’ என்னும் பொருள் தரும் ‘flourish’ என்ற சொல்லினுள் இவர் ‘நிலை பெறுதல், ஓங்குதல்’ ஆகிய இரு பொருட்களையும் அடக்கிவிட்டார்.  (‘Flourish’ என்னும் சொல் பின்னர் குயில் பாட்டு மொழிபெயர்ப்பில் வேறொரு பொருளில் ஆளப்பட்டிருப்பதை ஆண்டுக் காணலாம்.)

 

7  நூறு வயது

    a life of hundred summers

‘நூறு வயது’ என்பதை ‘a life of hundred summers’ என்றிவர் ஆக்கியுள்ளார்; ‘a life of hundred years’ என்றன்று. ஆண்டுகளை, குறிப்பாக வயதை ‘summers’ என்பது ஆங்கில மரபு.

 

9  பழியற்று 

    sans blemish

இதனை ‘without blame’ என்று மொழிபெயர்ப்பது சாதாரணம்.  ‘பழி’ என்பதைக் ‘கறை, களங்கம்’ என்பனவற்றின் மூலம் அடிக்கடி நாம் உணர்த்துகின்றோம்.  ‘கறை படிந்த கை’ என்பது சகஜம்.  ஒட்டக்கூத்தர் சோழனை ‘அகளங்கன்’ என்று புகழ்கின்றார். அவ்வகையில் இவர் ‘கறை, தவறு, குறைபாடு, இழுக்கு’ என்று பொருள்படும் ‘blemish’ என்னும் சொல்லை ஈண்டு தந்துள்ளார். ‘அற்று’ என்பதற்கு ‘without— இன்றி’ என்று பொருள்படும் ‘sans’ ஓர் அருஞ்சொல்.

 

17  முழுமூட நெஞ்சே!

      O Thou Heart of absolute foolishness!

‘முழுமூட’ என்பதை ‘absolute foolishness’ என்றிவர் தந்துள்ளார்.  ‘முழு’ என்பதை ‘complete, full, total’ என்றெல்லாம் சாதாரணமாக மொழிபெயர்க்காமல் இவர் ‘absolute’ என்றுள்ளார்.  ‘Absolute’ என்றால் ‘முழுமையான, வரம்பற்ற, கலப்பற்ற’ என்று பொருள்.  இச்சொல் ஒலியாலும் பொருட் கனத்தாலும் மிக்கது.

 

19  கோடி கோடிப் பலகோடி

      billions and billions of many billions

இங்கும், ‘எண்ணிலடங்கா’ என்னும் பொருள்பட மஹாகவி பாடியதை இவர் ‘billions  and billions of many billions’ என்று தந்துள்ளார்.  ஒரு கோடி என்பது 10 மில்லியன், அதாவது 1/10 பில்லியன்.  மொழிபெயர்ப்பில் சொல்லுக்குச் சொல் மாற்றுவது பன்முறையும் இடர்படுத்தி  நகைப்பூட்டும்; எனின் தவிர்க்க வேண்டும் என்பதற்கு இஃதொரு நல்ல எடுத்துக்காட்டு.

 

20  ஆணாய்ப் பெண்ணாய் அலியாய்

      man, woman and the sexless

‘அலி’ எனும் சொல்லை ‘hermaphrodite, eunuch’ என்று மொழிபெயர்ப்பது வழக்கம்.  முன்னது கரடுமுரடானது, பாலின்மையைக் காட்டிலும் இருபாற் தன்மை உண்மையைக் குறிப்பது.  பின்னது உடற் சேதத்தால் உருவாவது. எனவே இவர் இவ்விரண்டைக் காட்டிலும் சிறப்பாக ‘sexless’ எனும் அருவழக்கான சொல்லை வைத்துள்ளார்.

 

20  அபயம் அபயம் அபயம் நான் கேட்டேன்

      ‘Refuge, refuge, refuge’, I do beseech

‘அபயம்’ என்றால் ‘அ-பயம், பயமின்மை, பயத்தினின்று விடுதலை’ என்று பொருள்.  அபயம் தருவது யாது? அஃது ‘Refuge, protection— அடைக்கலம், புகலிடம், தஞ்சம்; God’s grace, as refuge— அருள்’ எனப்படுவது.  எனவே இவர் ‘அபயம் அபயம் அபயம் நான் கேட்டேன்’ என்பதை ‘Refuge, refuge, refuge’, I do beseech’ என்றாக்கியுள்ளார்.

 

23  விண்ணின் இடிமுன் விழுந்தாலும்

      Ev’n if bolt from sky falls before thee

இவ்வடியில் ‘விண்ணின் இடி’ என்பதை ‘bolt from sky’ என்றிவர் தந்துள்ளார்.  ‘இடி’ என்பதை ‘thunder’ என்பது வழக்கம்.  ஆயின் இடியை ‘bolt from the sky’ என்பது ஆங்கில மரபு வழக்கு.  நல்ல மொழிபெயர்ப்பு மூலம் போன்று தோன்ற வேண்டும்.  ஆங்கில மரபுச் சொற்களையும் தொடர்களையும் இவர் ஆங்காங்கு ஆளும் தகவு அத்தோற்றத்தைச் சிறப்பாக அளிக்கின்றது.

 

24  சேர்ந்திடப் பெண்டும்

      Belle for union

மஹாகவி ‘சேர்ந்திட’ என்று இடக்கரடக்கலாகக் கூறியது போன்றே  இவரும் ‘union’ என்று கூறியுள்ளது ‘euphemism’ எனப்படும்.

 

32  ஆதிமூலமே!

      O Source Original!

‘ஆதிமூலம்’ என்றால் ‘primitive cause— முதற்காரணம்; the primeval cause, the Supreme Being— மூலகாரணமானது ‘ என்று பொருள் (Tamil Lexicon).  ‘Source Original’ என்றிவர் அதைத் தந்துள்ளார்.  ‘ஆதி- Original’ என்றும் ‘Source— மூலம்’ என்றும் இவர் ஆக்கியுள்ளார்.  ‘ஆதி’ என்பது ‘தொடக்கம், காரணம்’ என்னும் பொருளுடைத்து.  ‘மூலம்’ என்பதை நாம் வழக்கமாக ‘அசல்’ என்று கொள்கின்றோம். எ-டு: ‘மூல பத்திரம்’.  ஆயின் ‘மூலம்’ என்பதன் வேர்ச்சொல் ‘வேர்’ எனும் பொருளுடைத்து.  Tamil Lexicon அதற்கு ‘source— வேர், ஆதி, தோற்றுவாய்; that which is original— மூலமாய் உள்ளது’ என்று பொருள் தந்துள்ளது.   ‘Original’ என்பது ‘முதலும் அசலும்’ என்பது தவிரச் சொல்லின் வேர்வழிச் சென்றால் ‘Origin-al’ என்று ஆகி ‘தோற்றுவாய்—ஆவது, தோற்றம்—தருவது’ என்றும் அமையும்.

 

36  எத்தனை கூறியும் விடுதலைக் கிசையாய்

      thou wouldst not long for freedom

      Howev’r much I goad thee 

‘எத்தனை கூறியும்’ என்பதை ‘Howev’r much I tell you’ என்பது சாதாரணம்.  அதை ‘However much I goad thee’ என்றுள்ளார் இவர்.  ‘Goad’ என்னும் பெயர் ‘தாற்றுக் கோல்’ என்னும் பொருளுடைத்து.  அச்சொல் வினையாக வரும் போது ‘தாற்றுக் கோல் கொண்டு குத்து’ என்னும் தலைப்பொருளும் ‘தொல்லை தந்து தூண்டுதலளி’ என்னும் வருபொருளும் தருவது.  ஒன்றைச் செய்யுமாறு பன்முறை நெருக்கித் தூண்டுவதை ‘to goad’ என்பர்.  ‘தாறு’ என்பது ‘தார்க்குச்சு, தார்க்குச்சி’ எனவும் வழங்குவது.  இது ‘ox goad— நுனியில் இருப்புமுள் பதிக்கப்பட்ட மாடோட்டுங் கழி, முட் கோல்’ என்னும் பொருளது.  இது சென்ற தலைமுறையிலேயே அருகிப் போனது; இன்று பெரும்பாலும் காண முடியாதது.

 

40  சிதைவினை நீக்கும்

      ruin ruination

‘சிதைவினை நீக்கும்’ என்பதை ‘remove damage’ என்றாக்குவது மிகச் சாதாரணமானது மட்டுமன்று; முழுப்பொருள் தராததுமாகும். இவர் அதை ‘ruin ruination’ என்றுள்ளார்.  ‘சிதைவு’ என்பதற்கு ‘ஊறுபாடு, சேதம்’ என்பது தவிர ‘ruin— முழுக்கேடு’ என்னும் பொருளும் உண்டு (Tamil Lexicon).  சிதைவினை அற நீக்குவது அதற்கு இன்மை வைத்துக் காப்பதேயாகும். எனவே இவர் ‘ruin ruination’ என்று தந்திருப்பது மகாகவியின் உள்ளக் கருத்தை நம் முன் நிறுத்தி வைக்கின்றது. இவர் தந்துள்ள ‘ruin ruination’ எனும் இத்தொடர் ‘இடும்பைக்கு இடும்பை, இன்மையை இன்மையாக்கி’ போன்ற தொடர்களை நாம் நினைவு கூரச் செய்வது.

 

40  பலபல காலமும்

      for aeons

‘பலபல காலமும்’ என்பதை ‘for a very long time’ என்றாக்குவது சாதாரணம். இவரதை ‘for aeons’ என்று தந்து பொருளெடை கூட்டியுள்ளார்.  ‘Aeon’ என்னும் அருஞ்சொல் ‘எல்லையற்ற காலம், ஊழி’ என்னும் பொருளுடைத்து.

 

40  நல்ல குணங்களே நம்மிடை அமரர்/ பதங்களாம்

      the good Gunas in us/ Alone are deathless beatitudes

குணம்’ என்பதை ‘character’ என்று சாதாரணமாக மொழிபெயர்க்காமல் ‘Guna’ என்றிவர் ஆக்கியுள்ளார்.  இவ்வாறு ‘Guna’ என்பது ‘சத்துவம், ராஜசம், தாமசம்’ என்னும் உயிரின் மூன்று பண்புகளைக் குறிக்கின்றது.  முக்குணக் கலவையின் அளவுப் பரிமாணமே ஒருவரது பண்புநலனை அமைக்கின்றது என்பது இந்திய தத்துவக் கொள்கை. அதைப் பொறுத்தே இகபர நன்மைகள் ஒருவரைச் சேரும்.  எனவேதான் இவர் ‘அமரர் பதம்’ என்பதை ‘world of Devas’ எண்ணாமல் ‘deathless beatitude— அழியாப் பேரின்பம்’ என்றுள்ளார்.  ‘Beatitude’ என்னும் அருஞ்சொல் ‘பேரின்பம்’ என்னும் பொருளுடைத்து.  ‘வியனுல கனைத்தையும் அமுதென நுகரும் வேத வாழ்வினைக் கைப் பிடித்தோம்’ என்று ஜய பேரிகை கொட்டியவரன்றோ நம் மஹாகவி!  ‘அமரத் தன்மையும் எய்தவும் இங்கு நாம் பெறலாம்’ என்று மஹாகவி நான்காம் பாடலில் கூறியதும் காண்க.

 

      பாரதிக்கு மொழிபெயர்ப்பால்                உரை வளம்

    பாரதிக்குப் பரிமேலழகர் T N R

     மொழிபெயர்ப்பின் உயர்திறம்

 

3  செய்யும் தொழிலுன் தொழிலே காண்

    Work done in sooth is your work

‘செய்யும் தொழிலுன் தொழிலே காண்’ என்பதை ‘Work done in sooth is your work’ என்றிவர் தந்துள்ளார். ‘Sooth’ என்பது ‘உண்மை, மெய்ம்மை’ என்னும் பொருளுடைய ஒரு பழஞ்சொல்.  செய்யும் தொழிலை உண்மையோடு செய்தால் அத்தொழில் இறைவனின் தொழிலாகும் என்பதை உணர்த்தும் பொருட்டு ‘sooth’ எனும் சொல்லை அவர் ஈண்டு வைத்துள்ளார். தொழில் எதுவாயினும் அஃது இறைவனின் தொழில் ஆகிவிடாது; அதற்கு அத்தொழிலில் உண்மை இருப்பது அவசியம் என்பதைக் கூறி மஹாகவியின் சொற்களுக்கு இவர் உரை செய்துள்ளார்.

 

4  சிற்பர மோனம்

    Divine Intelligence

‘சிற்பரம்’ என்றால் ‘அறிவுக்கு எட்டாத’ என்று பொருள்.  ‘Silence beyond intelligence’ என்பதல்ல ஈண்டு பொருள். ‘சொல்லின் திறம் ஓய்ந்த மோனத் திருக்காட்சி கடவுள்’ என்பது கவிஞர் திருலோக சீதாராமின் வாக்கு. சொல் என்பது அறிவின் அடையாளம்.  அவ்வறிவு ஓய்ந்த இடம் மோனம்.  அதுவே மெய்ஞானம்— Divine Intelligence!  அது கொண்டு சேர்க்கும் இடமே இறைவன்.  எனவே, இவர் ‘சிற்பர மோனம்’ என்பதை ‘Divine Intelligence’ என்றாக்கி மஹாகவியின் உட்கிடையை நமக்கு வெளிக்காட்டுகின்றார்.  புறவரியின் அகப்பொருள் நமக்கு இங்ஙனம் கிட்டுகின்றது.

 

4  அமரத் தன்மையும் எய்தவும்

    இங்குநாம் பெறலாம்

    immortality — here and now

    Can attained be

‘அமரத்தன்மை எய்தவும் இங்கு நாம் பெறலாம்’ என்பது மஹாகவி வாக்கு.  ‘இங்கு நாம் பெறலாம்’ என்றால் போதுமா?  அஃது இன்னே வசப்படவும் வேண்டாமா?  ‘அட மண்ணில் தெரியுது வானம், அதுநம் வசப்பட லாகாதோ?’ என்று மஹாகவி பாடியுள்ளார் அன்றோ?  எனவே, ‘இங்கு’ எனும் போது உபலட்சணத்தினால் ‘இப்போதே’ என்பதும் பெறப்படும்.  அதைப் புலப்படுத்து முகமாக இவர் மஹாகவி வாக்கை ‘immortality — here and now/ Can attained be’ என்றாக்கியுள்ளார்.  மஹாகவியின் முழுக்கருத்து மொழிபெயர்ப்பால் வெளித் தோன்றுகின்றது.  (5-ஆம் பாடலில் மஹாகவி ‘உலகத்தீர் இங்குப் புணர்வீர் அமரருறும் போகம்’ என்று அருளியுள்ளது இவ்வுரைக்கு அரண் செய்வது.)

 

5  போத வடிவு

    flame of wisdom

‘போத வடிவு’ என்பதை இவர் ‘flame of wisdom’ என்று தந்துள்ளார்.  ‘போதம்’ என்றால் என்ன? ‘Wisdom— ஞானம்; Knowledge, understanding, intelligence— அறிவு’ என்பதாகும்.  ஞானத்தை ஒளியாகவும் தீப்பிழம்பாகவும் கண்டு ‘ஞானாக்னி’ என்பது நம் மரபு.  எனவே ‘போத வடிவு’ என்பதை ‘flame of wisdom’ என்றிவர் அதற்கு பொருள் விரித்துக்  கண்டுள்ளார்; போதத்தின் வடிவு யாது என்பதையும் உணர்த்தியுள்ளார்.  ‘ஓசை ஒலியெலாம் ஆனாய் நீயே’ என்று அப்பர் பெருமான் எம்பிரானைப் போற்றுகின்றார்தீ ஒளியுடைத்து; ஆயின் தன்னளவில் ஓசையற்றது.  ஞானத்தின் பண்பு முழு அமைதி. ‘மோனம் என்பது ஞான வரம்பு’ என்பது ஔவை வாக்கு.  அந்த ஞானத்தைச் ‘சொல்லாமல் சொன்னவர்’ தென்முகக் கடவுள்.  அவரை ‘நினையாமல் நினைந்து பவத் தொடக்கை வெல்வாம்‘ என்கிறது திருவிளையாடற் புராணம்.

(‘எந்தன் போதம் தெளிய நினைக் கண்டேன்’ என்று திக்குத் தெரியாத காட்டில் பாடலில் வரும் ‘போதம்’ ஆங்கு கொள்ளும் பொருள் ‘உணர்வு, அறிவு’ என்பதாகும்.)

 

5  காதலுடன்

    with love abundant

காதலின் இயல்பு பெருகியோடுவதாகையால் இவர் ‘with love abundant’ என்று ஈண்டு பொருள் கூட்டித் தந்துள்ளார்.

 

7  நின் மவுன நிலை

    your beatitude of silence

‘நின் மவுன நிலை’ என்பதை ‘your silent state’ என்று நேர்மொழிபெயர்ப்பு செய்தால் அது சாதாரணம்.  அதை ‘your beatitude of silence’ என்றிவர் தந்துள்ளார்.  மௌனம் பிரம்ம நிலை.  அஃதை ஒருவன் எய்தினால் அவன் பெறுவது எல்லையில்லாப் பேரின்பம். எனவே இவர் அஃதை உணர்த்தும் ‘beatitude’ என்னும் அருஞ்சொல்லை ஈண்டு தந்துள்ளார்.   இச்சொல் ‘பேரின்பம், மீக்குயர் திருவருட் பேறு’ என்னும் பொருளுடைத்து.

 

8  கடமையாவன தன்னைக் கட்டுதல்

    Duties indeed are, to control the mind

‘தன்னைக் கட்டுதல்’ என்பதை சொல்லுக்குச் சொல் மொழிபெயர்த்தால் ‘to bind oneself’ என்று வரும்.  அது மூலத்தின் பொருளை விபரீதமாக மாற்றும்.  ஈண்டு ‘கட்டுதல்’ என்பது ‘To tie, bind, fasten, shackle— பிணித்தல்’ என்னும் பெருவழக்குப் பொருளதன்று.  ஈண்டது ‘கட்டுப்படுத்துதல், அடக்குதல், வசப்படுத்துதல், வெல்லுதல்’ என்னும் பொருளது.  எதைக் கட்டுப்படுத்த வேண்டும்?  மனத்தை.  ‘தன்னை’ என்பதீண்டு ‘மனத்தை’ என்று பொருள் தரும்.  எனவே இவர் ‘தன்னைக் கட்டுதல்’ என்பதை ‘to control the mind’ என்று மஹாகவி வாக்குக்கு உரை தந்துள்ளார்.

 

8  வான் பொருள்

    the Being Supernal

‘வான்’ என்பது ஈண்டு ‘பெரிய, மேலோங்கி நிற்கும்’ என்று பொருள்படும்.  ‘கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி’ எனும் ஔவை வாக்கை ஈண்டு கருதுக. ‘வான்கோழி’ என்று அவர் கூறியது இன்று வான்கோழி என்று நாம் அழைக்கும் turkey bird அன்று. ‘வான்கோழி’ என்று ஔவை கூறியதன் பொருள் ‘பெரிய கோழி’ என்பதாகும்.  ‘வான்’ என்பதை இவர் ‘Supernal’ என்று தந்துள்ளார்.  ‘Supernal’ என்பது ‘மேலுலகுக்குரிய, தெய்வத்தன்மையுடைய, மேன்மையான, விழுமிய’ என்னும் பொருளுடைய ஓர் இலக்கியச் சொல்.  ‘பொருள்’ என்னும் மஹாகவி சொல்லை ‘substance, thing’ என்றெல்லாம் மொழிபெயர்த்தால் அழகு குன்றும்.  இவர் அதை ‘the Being’ என்றுள்ளார்.  ‘Being’ என்பது இங்கு ‘இருத்தல், இருப்பது’ என்றாகாது.  அது ‘மெய்ம்மை, நிலைபேறுடைய ஒன்று, பொருண்மை’ எனும் பொருளை ஈண்டுடைத்து.  தலைப்பேரெழுத்து வைத்தமையால் அது பரம்பொருளைக் குறிப்பது.  ‘வான் பொருள்’ என்பது ‘உயர் பொருள்’ மட்டுமன்று; ‘உள்ளதாம் பொருள்’ என்பதும் கூட.  ‘உள்ளதாம் பொருள்’ என்பது மஹாகவி வாக்கு.

 

11  சலியாதுற நெஞ்சறியாது

      my heart knows not stillness

‘சலித்தல்’ என்றால் ‘To be troubled in mind, distressed— மனம் சஞ்சலம் அடைதல், சோர்தல்; அலுத்துக் கொள்ளுதல்’ என்றே நாம் இன்று கொள்கின்றோம். அஃதீண்டு ‘To move; to shake— அசைதல், எனவே, இயங்குதல்’ என்னும் பொருளது. ‘சலியாது’ எனின் ‘இயக்கமற்று, அமைதியுற்று’ என்று இங்கு பொருள்படும்.  அதை மாறுபொருள் விலக்கிச் சரிபொருள் உணர்த்தும் விதமாக இவரதை ‘stillness’ என்றுள்ளார்.

 

12  சூழ்ச்சிக் கரியனாய்

      beyond all devices

‘சூழ்ச்சி’ என்றால் நாமின்று ‘சதி’ என்பதையோ பொருளாகப் பெரிதும் கொள்கின்றோம்.  ஆயின் அதன் முதற் பொருள் ‘ஆலோசனை, நுண்ணறிவு, உபாயம்’ என்பதாகும்.  எனவே இவர் ‘சூழ்ச்சிக் கரியனாய்’ என்பதை ‘beyond all devices’ என்று தந்துள்ளார்.  ‘Device’ என்பதற்கு இன்று நாம் வழக்கில் கொள்ளும் ‘கருவி’ என்னும் பொருளைத் தவிர, ‘வழி, உபாயம், திட்டம், ஏற்பாடு, சூழ்ச்சி’ எனும் அரும்பொருளும் உண்டு.  இவ்வாறாக, மஹாகவி ‘சூழ்ச்சி’ என்பதால் குறித்தது யாது என்பதற்குத் தன் மொழிபெயர்ப்பின் மூலம் இவர் உரை தந்துள்ளார்.  ‘சூழ்ச்சிக்கு அரியனாய்’ என்பதைக் காணுங்கால் ‘உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்’ என்னும் பெரிய புராணத் தொடக்க அடி நம் நினைவில் எழுகின்றது.

 

12  வான் பொருள்

      Th’ ethereal One   

‘வான் பொருள்’ என்பதை ‘Th’ ethereal One’ என்றுள்ளார் இவர்.  ‘Ethereal’ என்னும் அருஞ்சொல் விண்ணையும் மண்ணையும் பிரபஞ்சம் முழுதையும் ஊடுருவி நிறைத்திருக்கும், ஆனால் கண்டறிய முடியாத ஒரு தத்துவத்தைக் குறிக்கும்- கட-உள் போன்று! ‘வான்’ என்பதைப் பிறிதோர் இடத்தில் ‘பெரிய’ என்னும் பொருளிலும் இவர் ஆண்டுள்ளார்.

ஈண்டு அச்சொல்லுக்குப் பொருள் இன்னதென்று தம் மொழிபெயர்ப்பின் மூலம் இவர் உரை செய்துள்ளார்.

 

24  அச்சமில்லை அமுங்குதலில்லை

      நடுங்குதலில்லை நாணுதலில்லை

      பாவமில்லை பதுங்குதலில்லை

      Fear ceasing, ceases depression;

      Trembling ceasing, ceases shame;

      Sinning ceasing, ceases skulking

‘அச்சமில்லை அமுங்குதலில்லை/ நடுங்குதலில்லை, நாணுதலில்லை/ பாவமில்லை பதுங்குதலில்லை’— இவ்வடிகளைக் காணும்போது ஏதெது இல்லை என்னும் ஒரு பட்டியலாகவே நமக்குத் தோன்றும்.  ‘அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே’ என்னும் மஹாகவி வாக்கையே இதற்கு நாம் பொருள்காட்டியாகக் கொள்வது இயற்கை. ‘இல்லை’ என்பதை நாம் ஆங்கு வினைமுற்றாகக் கொள்கின்றோம்.  எனின், ‘There is no fear, no sinking (or being crushed), no shaking, no shying, no sin, no hiding’ என்றுதான் மொழிபெயர்ப்பு அமையும். மஹாகவியின் மனக் கருத்தைத் தம் ஞான பிதா, மஹாகவியை ஞானபிதாவாகக் கொண்ட கவிஞர் திருலோக சீதாராமின் வழி உள்கி, உள்ளி உணர்ந்துள்ளவர் இவர். எனவே ‘இல்லை’ என்பதை வினையெச்சமென்று அறிந்து ‘இல்லாவிட்டால்’ என்று அதன் பொருளை இவர் கண்டுள்ளார்.  இப்போது அவ்வடிகள் கூறுவது யாது? ‘அச்சமில்லாவிட்டால் அமுங்குதலில்லை; நடுங்குதலில்லாவிட்டால் நாணுதலில்லை; பாவமில்லாவிட்டால் பதுங்குதலில்லை’  என்னும் மஹாகவியின் உட்கருத்து, உள்ளக்கருத்து நமக்குத் தெளிகின்றது, தெரிகின்றது.  இவர் தரும் மொழிமாற்றம் மஹாகவியின் பாடலுக்குச் சரி உரை செய்கின்றது.  ‘இல்லை இல்லை’ என்பது ஈண்டு நிரலன்று; காரண காரியத் தொடர் வினையெச்சமாகும்.  ‘அமுங்குதல்’ என்பதை இவர் ‘depression’ என்றுள்ளார். ‘அமுங்குதல்’ என்பது ஈண்டு ‘அழுத்தப்படுதல், நசுக்குறுதல்’ என்று பொருள்படும்.  ‘Depression’ எனும் சொல் ‘காற்றழுத்தத் தாழ்வு’ என்று வானிலை ஆய்வாளர்களாலும் ‘மனத்தாழ்வு’ என்று உளவியலாளர்களாலும் இன்று பொருள் கொள்ளப்படுவது யாவரும் அறிந்தது. மனத்தாழ்வை ‘a sinking feeling’ என்பது ஆங்கில வழக்கு.  ‘Depress’ என்பது ‘அமுக்குதல்’ எனும் மூலப்பொருளை உடைத்து.  நீட்டித்த அச்சம் மனத்தாழ்வுறுத்தும் என்பது உளவியலாளர்கள் கண்டுள்ளது.  அச்சமில்லாவிட்டால் அம்மனத்தாழ்வு வருவதற்கில்லை.  ஆயின், அச்சம் நீங்கின் மனத்தாழ்வு அகலும். ஆகவே, ‘அச்சமில்லை அமுங்குதலில்லை’ என்பதை இவர் ‘Fear ceasing, ceases depression’ என்று ஆக்கியிருப்பது  அறிவியல் பொருத்தமுடையது.

‘நாணம்’ என்பதை நாம் ‘வெட்கம்’ என்றே இன்று பொருள் கொள்கின்றோம்.  ஆயின் அதன் பழம்பொருள் வேறு. நாணம் மகளிருக்கு மட்டும் உரித்தாகப் பண்டு கொள்ளப்படவில்லை. ‘Shame; sensitive dread of evil; keen moral sense— பழிச்செயல் முதலியவற்றால் உண்டாம் மானம்; பழிக்கஞ்சுவது’ என்பதே முன்பு அதன் பொருள். ‘நாணமுடையவன்’ என்றால் ‘பழிச்செயல் புரிய அஞ்சுபவன்’ என்பதே பண்டு பொருள்.  பேராண்மை படைத்தவர்களை ‘நாணமுடையவன்’  என்று கூறுவது பண்டு உண்டு.  அருச்சுனன் போன்ற பெருவீரர்களை ‘நாணமுடையவன்’ என்று மகா பாரதம்’ கூறுவதை அந்நூலின் மூலம் பயின்றோர் நன்கு அறிவர்.

‘பாவமில்லை, பதுங்குதலில்லை’ என்பதில் ‘பதுங்குதல்’ என்பதை இவர் ‘hiding’ எண்ணாமல் ‘skulking’ என்றுள்ளார். பதுங்குதல் அச்சத்தாலோ குற்ற உணர்வாலோ மற்றவரை வீழ்த்தவோ பிறர் அறியாவண்ணம் மறைந்திருத்தல் ஆகும்.  அப்படிப்பட்டவர் செல்வதைப் ‘பதுங்கிப் பதுங்கிச் செல்கின்றார்’ என்போம். ‘Skulking’ என்பது ‘தீய அல்லது கோழைத்தனமான நோக்கத்துடன் மறைந்திருத்தல் அல்லது செல்லுதல்’ என்று பொருள்படும்.  பாவம் மிகச் செய்தோர் பதுங்கி இருத்தலும் பதுங்கிச் செல்லுதலும் இயல்பன்றோ!  அதை ‘skulking’ எனும் சொல் நன்கு பொருளுணர்த்துகின்றது. ‘Sin ceasing, ceases skulking’ என்னுமிவர் ஆக்கம் ஏன் பதுங்க வேண்டுமென்று காட்டுவதால் அது பாடலுக்கு உரையும் ஆகின்றது.

 

27  பத்தியுடையார் காரியத்திற் பதறார்

      Men of devotion work sans commotion

மிக அழகார்ந்த ஒலியியைபுள்ள அடி இது.  இவர் அமைத்த இவ்வோரடிக்குள்ளேயே ‘devotion … … commotion’ என்று உள்ளமை ஒலியியைபுள்ள சிறப்பு வாய் விட்டுப் படித்துக் காதால் கேட்டு இன்புறத் தக்கது.

‘பதறுதல்’ என்பது இன்று ‘மிக்க அச்சமும் கவலையும் பரபரப்பும் உற்ற ஒரு மன நிலை’யைக் குறிக்கவே வழங்கி வருகின்றது. Tamil Lexicon-உம் இதற்கு முதற் பொருளாக ‘To be flurried, confused, agitated— கலங்குதல்’ என்று தந்துள்ளது.  ஆயின் இவர் கொண்டுள்ளது அதில் அடுத்துக் காணும் பொருள்: ‘To be impatient, overhasty, to hurry— முன்பின் யோசனையின்றி அவசரப்படுதல்’. அதுவே இவர் இம்மொழிபெயர்ப்பில் ஆண்டுள்ள பொருள்.  இவர் வைத்துள்ள ‘commotion’ எனும் சொல் ‘கிளர்ச்சி, குரல், குழப்பம், கொந்தளிப்பு, சந்தடி’ என்னும் பொருளுடைத்து.  இதன் மூலப்பொருள் ‘எங்கும் ஆட்டம்’ என்பதாகும்.

 

27  வித்து முளைக்கும் தன்மை போல்

      With patience great, like th’ seed that germinates

மீண்டும் மொழிபெயர்ப்பு அடியில் உள்ளமை ஒலியியைபு!  பொறுமைக்கு அரியதோர் இலக்கணம் வித்து முளைக்கும் விரைவடக்கம்.   வித்து விழுந்து முளைப்பதற்கு  நாட்களுமாகலாம், நூற்றாண்டுகளும் ஆகலாம்.  அதையிவர் ‘patience great’ என்கின்றார்.  இங்கு ‘the seed’ என்றிருக்க வேண்டியதை ‘th’ seed’ என்று ‘the’-வின் ஒலியளவை இவர் சுருக்கியது அடியின் தளை தட்டாமலிருப்பதற்காக.

 

31  தீங்கவிதை பெய்வாள்

      will rain poetry

‘பெய்தல்’ என்பதற்குப் பொருள் பல உண்டெனினும் தலையாயதும் ஈண்டு அமைவதும் ‘To rain— மழை போல் மேனின்று பொழிதல்’ என்பதாகும்.  அதை இவர் ‘will give much poetry like rain ‘ எண்ணாமல் ‘rain’ எனும் சொல்லையே வினையாக வைத்து ‘will rain poetry’ என்றுள்ளார்.  இதனால் அவள் மேலிருந்து அருள்வதும் அதுவும் ஏராளமாகப் பொழிவதும் ஒரே சொல்லால் அறியக் கிடக்கின்றன.

 

32  பேசாப் பொருள்

      the not spoken

கடவுளுக்கு யூதர்கள் வழங்கும் பெயர் யெஹோவா அல்லது யாவெஹ் என்பது. இவ் எபிரேய மொழிச் சொல்லின் நான்கெழுத்து வடிவம் YHWH என்று இலத்தீனிலும் ஆங்கிலத்திலும் குறிக்கப்படும்.  மரபூன்றிய யூதர் இறைவன் பெயரை உச்சரிப்பதும் அடாது என்று அஞ்சி ‘என் தலைவா!’ என்றே இறைவனை அழைத்து வந்ததால் அதன் உச்சரிப்பு முறையும் மறைந்து போனது.  ‘பேசாப் பொருள்’ என்பதற்கு இஃதொரு நல்ல எடுத்துக்காட்டு.  நம் மஹாகவியோ ‘பேசாப் பொருளை பேச நான் துணிந்தேன்’ என்று முரசறைந்தவர்.  ‘பேசாப் பொருள்’ என்பதை இவர் ‘the not spoken’ என்றுள்ளார்.  ‘ஓதற்கரியவன்’ என்று எம்பிரானை தெய்வச் சேக்கிழார் கூறியுள்ளார்.  மாமுனி மில்டன் தன் காவியப் பொருளை ‘Things unattempted yet in prose or rhyme’ என்பதை இங்கு நாம் நினைவுகூர்வாம்.

 

32  கேட்கா வரம்

      the boon not sought

ஈண்டுகேட்கா வரம்’ குறிப்பது ‘யாரும் கேட்காத வரம்’ என்பதை.  எனவே இவர் அதை ‘the boon not sought’ என்று தந்துள்ளார்.  அவ்வரம் யாது?  ‘எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே’ என்று தாயுமானவர் சொன்னதே அது.

 

32  துன்பம்

      pain

‘துன்பம்’ என்பதன் வழக்கமான பொருள் ‘Affliction, sorrow, distress, trouble— மன வருத்தம்’ என்னும் Tamil Lexicon.  ஆயின் அடுத்து அந்நூல் ‘Physical pain— மெய்வருத்தம்’ என்றும் பொருள் தந்துள்ளது.  ஆகவே இவர் ‘துன்பம்’ என்பதை ‘pain’ என்று தந்துள்ளார்.  இச்சொல் மன வருத்தம், மெய்வருத்தம் இரண்டுக்கும் பொருந்துவதை நோக்குக.  இன்றும் ஈழத் தமிழர் உடற்பிணியை ‘வருத்தம்’ என்றே குறிப்பதை நோக்குக.

 

37                    அன்புடையார்

      இன்புற்று வாழ்தல் இயல்பு

      Happy life is th’ nature of those that love

‘அன்புடையார்/ இன்புற்று வாழ்தல் இயல்பு’ என்பதில் ‘இயல்பு’ என்பதை ‘வழக்கம்’ என்று கொண்டு ‘It is usual for those who love to live happily’ என்று மொழிபெயர்ப்பது இயல்பு.  ஆயின் இவரதை ‘Happy life is th(e) nature of those who love’ என்றுள்ளார்.  அதாவது, ‘அன்புடையார் இன்புற்று வாழ்தல்’ அவர்தம் ‘இயல்பு’ என்றிவர் இதற்குப் பொருள் கண்டுள்ளார்.  ‘இயல்பு’ என்பதை ‘வாழ்தல்’ என்பதினின்று பிரித்து ‘அன்புடையார்’ என்பதில் கொண்டுகூட்டி இவர் பொருள் கூறியுள்ளார்.  இவ்வாறு தம் நுண்மான் நுழைபுலத்தால் ஆழ்ந்திருக்கும் கவியுளத்தை உணர்ந்து அதைத் தம் மொழிபெயர்ப்பில் புலப்படுத்துவது இவருக்கு இயல்பு!

 

39  முன்னோன்

      Ancient One

‘முன்னோன்’ என்றால் ‘மூதாதை’ என்று பொருள் கொள்வது வழக்கு.  ஆயின் அதற்கு முதற்பொருள் ‘கணபதி’ (Tamil Lexicon) என்பது!  காலத்தால் முன்னவனும் அனைவர்க்கும் மூதாதையும் ஐங்கரன் அன்றோ!  அஃதை உணர்ந்திவர் ‘முன்னோன்’ என்பதை ‘Ancient One’ என்று தந்துள்ளார்.

 

39  பொய்க்குங் கலியை நான் கொன்று

      Kill Kali— the falsifier

‘பொய்க்கும்’ என்பதை ‘பொய்யாகப் போகும்’ என்று செயப்படுபொருள் குன்றா வினையாகப் பொருள் கொள்வது வழக்கு.  ‘அவன் வாக்கு பொய்த்துவிட்டது’ என்று நாம் கூறுவதுண்டு.   ஈண்டது ‘To fail, as a prediction or omen; to deceive hope, as clouds— தவறுதல்’ என்னும் பெருவழக்குப் பொருளோ ‘To prove false— தம் செயலி னின்று பின்வாங்குதல்’ என்னும் சிறுவழக்குப் பொருளோ தருவதன்று.  ஈண்டது செயப்படுபொருள் குன்றிய வினையாக வந்து ‘To lie, utter falsehood; to make false pretences— பொய்யாகப் பேசுதல்; To deceive, cheat— வஞ்சித்தல்’ என்னும் அருவழக்குப் பொருளுடைத்து.

‘பொய்த்தல்’ செயப்படுபொருள் குன்றிய வினையாகவும் வந்து ‘வஞ்சித்தல்’ என்னும் பொருள் தருவதுண்டு (Tamil Lexicon).

ஈண்டு ‘பொய்க்குங் கலி’ என்பதன் பொருள் ‘பொய்த்துப் போகும் கலி’ என்பதன்று. ‘பொய்யாக ஆக்கும் கலி’ என்பதே இதன் பொருள்.  ஈண்டு ‘பொய்க்கும் கலி’ என்பதில் ‘பொய்த்தல்’ கலிக்கு உறுவினையன்று; கலி தரு வினை.  ‘நல்லதையெல்லாம்  அல்லதாக்கி நம்மைத் தீமையில் ஆழ்த்தும் கலி’ என்பதே இதன் விரிபொருளாம். பொய் என்பது உண்மைக்கு நேர்மாறானது என்பதே முதற் பொருள்.  என்றும் உள்ளதாம் பொருள், மாறாத பொருள், நாம் நாட வேண்டிய பொருள் இறைவன் மட்டுமே.  நம்மை மாயையில் ஆழ்த்திப் போலியான இவ்வுலகை மெய்யானது, நிலையானது என்று மயக்கி அப்பொய் வழி செலுத்துவது கலி.

எனவேதான் மஹாகவி அதைப் ‘பொய்க்குங் கலி’ என்றார்.  மஹாகவியின் உள்ளக் கருத்தை உற்றுணர்ந்த இவர் அவர் வாக்கின்  உட்கருத்தை நமக்கு விளக்கு முகமாக ‘வஞ்சிக்கும் கலி’ என்பதே சரிபொருள் என்று கண்டு Kali— the falsifier’ என்று தந்துள்ளார்.   

மஹாகவி வாக்குக்கு இவர் மொழிபெயர்ப்பு உரை.

 

40  விதியே வாழி

      Hail Will Divine!

‘விதி’ என்றால் பெரும்போது ‘destiny, fate— ஊழ்’ என்றும் சிறுபோது ‘rule, law— ஆணை, சட்டம், விதிக்கப்பட்ட ஒழுங்கு’ என்றும் நாம் பொருள் கொள்வது வழக்கம். மஹாகவி ‘விதி’ என்று ஈண்டு குறிப்பது ‘விதியை அமைத்து, ஊட்டி, நிறுத்தி, மாற்ற வல்ல பரம்பொருளை.  அலகிலா விளையாட்டுடை அண்ணல் இவை அனைத்தையும் தன் சங்கற்பத்தால் செய்கின்றான் என்பது மறைவாக்கு.  சித்தமும் சித்த இயக்கமும் சங்கற்பம் எனப்படும்.  அதையே இவர் ‘Will’ என்று குறித்து ‘விதி’ என்று மஹாகவி குறிப்பிட்டது எதை என்று நமக்கு விளக்கவுரை தந்துள்ளார்.  ‘Will’ என்ற சொல்லுக்கு முகட்டெழுத்து வைத்து அது மகாசங்கற்பமாம் இறைவனைக் குறிக்கும் என்பதையும் ஈண்டிவர் உணர்த்தியுள்ளார்.

மஹாகவி வாக்குக்கு இவர் மொழிபெயர்ப்பு உரை.

 

40  அமரர் பதங்கள்

      Deathless beatitudes

‘பதம்’ என்பது ஈண்டு ‘பதவி, அதிலும் தெய்வ பதவி’ என்று பொருள்படும்.  வழக்கமாக அப்பதவி சொர்க்க இன்பம் தருவது.  மஹாகவி குறிப்பதோ அழியா இன்பம், பேரின்பம். எனவேதான் ‘அமரர்’ என்பதை இவர் ‘முத்தர்’ என்றே கொண்டு மொழிபெயர்த்துள்ளார். பதங்களைப் பெற்ற அமரரின் அழிவின்மையை அப்பதங்களின் மேலேற்றி அத்தொடரை ‘Deathless beatitudes’ என்றுள்ளார் இவர்.  ‘Beatitude’ என்றால் ‘பேரின்பம்’ என்று பொருள்.  எனவே ‘அமரர் பதங்கள்’ ‘Deathless beatitudes’ என்றாகியது.

மஹாகவி வாக்குக்கு இவர் மொழிபெயர்ப்பு உரை.

 

பேரிலக்கிய எதிரொலிகள்

 

12  சூழ்ச்சிக் கரியனாய்

      beyond all devices

‘சூழ்ச்சி’ என்றால் நாமின்று ‘சதி’ என்பதையோ பொருளாகப் பெரிதும் கொள்கின்றோம்.  ஆயின் அதன் முதற் பொருள் ‘ஆலோசனை, நுண்ணறிவு, உபாயம்’ என்பதாகும்.  எனவே இவர் ‘சூழ்ச்சிக் கரியனாய்’ என்பதை ‘beyond all devices’ என்று தந்துள்ளார்.  ‘Device’ என்பதற்கு இன்று நாம் வழக்கில் கொள்ளும் ‘கருவி’ என்னும் பொருளைத் தவிர, ‘வழி, உபாயம், திட்டம், ஏற்பாடு, சூழ்ச்சி’ எனும் அரும்பொருளும் உண்டு.  இவ்வாறாக, மஹாகவி ‘சூழ்ச்சி’ என்பதால் குறித்தது யாது என்பதற்குத் தன் மொழிபெயர்ப்பின் மூலம் இவர் உரை தந்துள்ளார்.  ‘சூழ்ச்சிக்கு அரியனாய்’ என்பதைக் காணுங்கால் ‘உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்’ என்னும் பெரிய புராணத் தொடக்க அடி நம் நினைவில் எழுகின்றது.

 

25  நமக்குத் தொழில் கவிதை

      we build th’ lofty rhyme

மாமுனி மில்டனின் (John Milton) லைசிடாஸ் (Lycidas) எனும் இரங்கற் பாட்டில் உள்ள இவ்வடிகள்  செவ்விலக்கியம் பயின்றாற்கு நினைவிலெழும்:

“… … … he knew

Himself to sing, and build the lofty rhyme.” (10-11)

 

32  பேசாப் பொருளைப் பேச நான் துணிந்தேன்

      I have willed, aye, to speak the not-spoken

மாமுனி மில்டன் தன் துறக்க நீக்கம் (Paradise Lost) எனும் காவியத்தின் தொடக்கப் பகுதியிலுள்ள இவ்வடியை இலக்கிய அன்பர்கள் உடன் உன்னுவார்கள்:

“Things unattempted yet in prose or rhyme.”

கடவுளுக்கு யூதர்கள் வழங்கும் பெயர் யெஹோவா அல்லது யாவெஹ் என்பது. இவ் எபிரேய மொழிச் சொல்லின் நான்கெழுத்து வடிவம் YHWH என்று இலத்தீனிலும் ஆங்கிலத்திலும் குறிக்கப்படும்.  மரபூன்றிய யூதர் இறைவன் பெயரை உச்சரிப்பதும் அடாது என்று அஞ்சி ‘என் தலைவா!’ என்றே இறைவனை அழைத்து வந்ததால் அதன் உச்சரிப்பு முறையும் மறைந்து போனது.  ‘பேசாப் பொருள்’ என்பதற்கு இஃதொரு நல்ல எடுத்துக்காட்டு.  நம் மஹாகவியோ ‘பேசாப் பொருளை பேச நான் துணிந்தேன்’ என்று முரசறைந்தவர்.  ‘பேசாப் பொருள்’ என்பதை இவர் ‘the not spoken’ என்றுள்ளார்.  ‘ஓதற்கரியவன்’ என்று எம்பிரானை தெய்வச் சேக்கிழார் கூறியுள்ளார்.  மாமுனி மில்டன் தன் காவியப் பொருளை

Things unattempted yet in prose or rhyme (Paradise Lost 1, 16)

என்பதை இங்கு நாம் நினைவுகூர்வாம்.

இவர் இவ்விடத்தில் குறிப்புரையில் கூறுவது:  “ரகசியத்துக்கெல்லாம் ரகசியமானதை வெளிப்படுத்துவதே பாரதியின் நோக்கம். அதனை அறிந்தால் கேட்க முடியாததைக் கேட்கலாம், உணர்வு கடந்ததை உணரலாம், அறிய ஒண்ணாததை அறியலாம்.”

 

எங்குமஞ்சோம் எப்போதுமஞ்சோம்

nor place nor time

Can us affright

தாம் ‘அஞ்சோம்’ என்னும் செய்வினைச் சொல்லை இவர் ‘can us affright’ என்று செயப்பாட்டுவினைத் தொடராக்கியுள்ளார்.  ‘Affright’ என்பது ‘அச்சுறுத்தல், திகிலூட்டுதல், உட்குறுத்தல்’ எனும் பொருளுடைய ஒரு பழஞ்சொல்.  ஆங்கில இலக்கணப்படி ‘neither place nor time’ என்றிருத்தலே சரி.  ஆயின் இவர் ‘nor place nor time’ என்றுள்ளார்.  இஃது ஆங்கிலத்தில் இலக்கிய, குறிப்பாகக் கவிதை மரபு.

Like to the time o’ th’ year between the extremes

Of hot and cold, he was nor sad nor merry.

என்று ஷேக்ஸ்பியர் இயற்றிய அந்தோணியும் க்ளியோப-த்ராவும் (Antony & Cleopatra) எனும் நாடகத்தில் வரும் அடிகள் (1, 5, 54&55) ஆங்கிலச் செவ்விலக்கியம் பயின்றோர்க்கு நினைவுறும்.

அவ்வாறே, இன்று நாம் ‘either … … or’ என்பதை ஆங்கிலத்தில் பண்டு ‘or … … or’ என்றும் வழங்கியதுண்டு.  ‘Tell me where is fancy bred,/ Or in the heart or in the head?’ என்பது ஷேக்ஸ்பியரின் ‘The Merchant of Venice’ எனும் நாடகத்தில் வருவது.  நுண்மான் புலமிருந்தால் நிறைய நுழையலாமே!

 

வஞ்சகக் கவலைக்கு இடங்கொடேல் மன்னோ

no room

Thou shalt give to deceitful worry

‘கவலை’யை ‘worry’ என்பது சரி.  ‘வஞ்சகக் கவலை’?  இவர் அதை ‘deceitful worry’ என்றுள்ளார்.  ‘Deceit’ என்னும் சொல்லுக்கு ‘வஞ்சகம்’ என்னும் முதற்பொருள் தவிர ‘வேண்டுமென்றே தவறான வழி காட்டுதல்’ என்றும் பொருளுண்டு.  அஃதிங்கு சாலப் பொருத்தமுடைத்து.

கவலை என்பதென்ன?  வருங்காலச் சிந்தனையே கவலை.  வருங்காலம் அறியமுடியாதது.  அதைக் கருதுங்கால் நிச்சயமின்மையே எஞ்சும்; உளைச்சல் கூடும்; அவலம் மிகும். வருங்காலத்தை ஆராய்ச்சி செய்து அறிந்து விடலாமென்று மனம் நம்மை எப்போதும் ஏமாற்றுகின்றது.  நாமும் ஆண்டாண்டு காலம் மாறாது ஏமாறியே வருகின்றோம். இவ்வாறு நம்மை ஏமாற்றி வஞ்சனை செய்து கவலையில் ஆழ்ந்து துயர் மிகச் செய்யும் மனத்தின் வஞ்சகத்தை அது வளர்க்கும் கவலையின் மேலேற்றி, அதாவது கருத்தாவின் பண்பைக் காரியத்தின் மேலேற்றி ‘வஞ்சகக் கவலை’ என்கின்றார் மஹாகவி.  அதையே இவரும் ‘deceitful worry’ என்று தந்துள்ளார்.

 

கவிநலத்தின் ஒலிநயம்

27  பத்தியுடையார் காரியத்திற் பதறார்

      Men of devotion work sans commotion

மிக அழகார்ந்த ஒலியியைபுள்ள அடி இது.  இவர் அமைத்த இவ்வோரடிக்குள்ளேயே ‘devotion … … commotion’ என்று உள்ளமை ஒலியியைபுள்ள சிறப்பு வாய் விட்டுப் படித்துக் காதால் கேட்டு இன்புறத் தக்கது.

 

 

 

Read More

Leave a Reply

*