ஸ்ரீராம் குழுமம் நடத்தும் மகாகவி பாரதியார் பிறந்தநாள் விழாவில் கண்டு(8.2.2020) பேசினேன் .அப்போது சேக்கிழார் அடிப்பொடி பாரதி பதிப்பு வெளியிட வேண்டும் என்றார். திடுமென மறைந்த செய்தியறிந்து கலங்கினேன் .
முதுமுனைவர் டி என் ஆர். (18.8.1934-6.4.2021) அவர்களை நான் அறுபதாண்டுகளாக அறிவேன் என்றால் பலர் வியப்பார்கள் .
தஞ்சையில் , சரபோசி மன்னர் கல்லூரியில் நான் பணியில் சேர்ந்த ஆண்டு 1958 . பணியில் சேர்ந்து முடிந்த மறுவருடம் நான் சேக்கிழார் அடிப்பொடி அவர்களின் இல்லத்தில் விருந்துண்டேன் . உண்டு முடித்த பிறகு அவரோடு நடத்திய முதல் உரையாடல் திருமுறைகள் ஓதும் பழக்கத்தைக் கடைப்பிடியுங்கள் என்றார் .
அப்போது அவர் ஒரு வழக்கறிஞர் மட்டுமல்ல – பேருந்து நிறுவன அதிபரும் கூட .
கண்டாரைக் கவரும் கட்டழகர் ! ,
ஜெமினி கணேசன் ஒரு சுற்றுப் பெருத்திருந்தால் டி என் ஆர் ஆகக் காணமுடியும் .
தஞ்சையிலிருந்து தில்லிக்கு என்னை வழியனுப்பினார் .
வழக்கறிஞர் நாராயணசாமி ஐயரை அறிமுகம் செய்து இவர் மகனார் தில்லியில் வானொலி – செய்தித்துறையில் பணியாற்றுகிறார் அவர் தான் பின் அமெரிக்கா சென்று வானொலி உரை நிகழ்த்தியவர் திரு நாகரத்தினம் ஆவார்.
பேராசிரியர் எம் எஸ் நாடாரிடம் ஒரு கடிதம் பெற்றுத் தில்லியில் செய்தி ஒலிபரப்பில் பணியாற்றும் இன் குரல் இராமநாதனைக் கண்டு பேசுங்கள் என்றார் .
தஞ்சையில் நான் வளர்த்துக்கொண்ட இலக்கிய வட்டத்தைப் பற்றி, முன்னரே 2010 ஆம் ஆண்டில் வெளியான அருளுக்கு ஒளவை சொன்ன நூலில் கூறியிருக்கிறேன்.
அறிஞர் இராமச்சந்திரன் பேசும் போது, உலக அறிஞர்கள் பற்றிய பல குறிப்புக்களைச் சொல்வார்.
இலக்கியப் புலமையை வாழ்வின் நிறைவாகக் கொண்ட பண்பாளர் .
சித்திரக்கவிகளைப் புனைந்த அப்துல் கபூர் என்ற இசுலாமியப் பெருந்தகைக்கு, தான் வைத்திருந்த இல்லத்தையே அன்பளிப்பாகத் தந்தவர் புரவலர் டி. என். ஆர்.
எஸ் எம் டி என்ற பேருந்து நிறுவனத்திற்கு அப்போது தலைவராக இருந்தார் டி. என். ஆர்.
அந்த வட்டாரத்தில், செல்வாக்குப் பெற்ற பேருந்து நிறுவனமாக இருந்தது எஸ். எம். டி.
அவர்பால் ததும்பிய இலக்கிய ஆர்வமும், புலமையும் எப்படிப்பட்டவை என்பதற்கு ஒரு சான்று சொல்ல வேண்டும்.
வேலை நிறுத்தம் மற்றும் பல சிக்கல்கள் வந்ததனால், அந்த நிறுவனத்தில் இருந்து விலகி விட்டார் டி. என். ஆர்.
அப்போது எனக்கு ஒரு கடிதம் எழுதினார்.
என்னை எப்போதும் எஸ் எம் டி பேருந்துகளின் உரிமையாளர் என்று அன்போடு அழைப்பீர்கள். இப்போது எஸ் போய்விட்டது. நான் எம் டி யாகி விட்டேன் என்று எழுதியிருந்தார்.
ஒரு கவலையில்லை ,வாழ்க்கையில் எதையும் எளிமையாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதனை, அவரைப் பார்த்து நாம் கற்றுக் கொள்ள வேண்டும்.
இலக்கியம் போல, அனைத்துக் கலைகளிலும் திளைத்து சிவநெறிச் சிகரமாக, சேக்கிழார் அடிப்பொடியாக விளங்கினார்.
பன்னிரு திருமுறைகளை, சைவ சித்தாந்த சாத்திரங்களை, அழகிய ஆங்கிலத்தில் வழங்கிய, அவரைக் கண்டு பேசுவதே ஒரு நூலகத்தில் நுழைவது போலத்தான்.
தஞ்சையில் நான் கோயிலுக்குச் செல்வதுண்டோ இல்லையோ, டி. என். ஆரின் இல்லத்தில் பேசி மகிழ்வது, நாள் தவறாமல் நடந்தது.
பூண்டிக் கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராக இருந்தவர். டாக்டர் தியாகராஜன், நன்றாகப் பாடுவார். கிதார் வாசிப்பார். பிறகு ஆர்மோனியம் இசைப்பார். ஆங்கிலக் கவிதைகளை, அவ்வளவு உணர்ச்சியோடு சொல்வார். நடிப்பார். ஆங்கில இலக்கியத் திறனாய்வில், அளவில்லாத ஆர்வம் கொண்டவர். அருமையான ஆங்கில உரைநடையை எழுதக்கூடிய வன்மை உடையவர், டாக்டர் தியாகராஜனிடத்திலும், எனக்கு நல்ல நட்பு இருந்தது.
.அவரால் பேராசிரியர் இராமன் ,கே.ஜி.சேஷாதிரி, சங்கர நாரயணன்
ஈழத்தில் புலவர்கள் சைவ சித்தாந்தத்தின் ஆழத்தை அளந்தறிந்தவர்கள் .ஈழப் பெரும் புலவர் பேரவையில் முப்பொருள் முழுமை – தசகாரிய விளக்கம் – வேதாந்தத் தெளிவு என்ற தலைப்பில் இருமொழியிலும் பேசிப்புகழ் பெற்றார் .
முதுமுனைவர் பட்டப்பேற்றினை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் அவருக்கு(2001) வழங்கிப் பெருமை கொண்டது .
என்னைவிட ஓராண்டு மூத்தவர் .
பத்தாண்டுகள் படிப்பில் முதிர்ந்தவர்
இருபதாண்டின் எல்லை தாண்டித் தெளிந்தவர் .
நாற்பாதாண்டுக்கு எழுதியவர் .
ஆங்கில மொழிபெயர்ப்புக்கு அவர் சேர்த்த குறிப்புரைகள் ஆயிரம் பக்கங்களைத் தாண்டும் .
அறிஞர் கோபால ஐயர் ,கவிஞர் திருலோக சீதாராம் ,பேராசிரியர் எம் எஸ் நாடார் ,பேராசிரியர் சேசாத்திரி ,பேராசிரியர் இராமன் ,பேராசிரியர் சங்கர நாராயணன் ,வழக்கறிஞர் இராமலிங்கம் ,பதிவாளர் சுப்புராயலு முதலியாரிடம் அமர்ந்து பேசி மகிழ்ந்த நாட்களும் , டி என் ஆர் தலைமை தாங்கிய மாட்சியும் நினைவைக் கலக்குகின்றன .
யார் அறிவார் எங்கள் அண்ணல் பெருமையை
யார் அறிவார் இந்த அகலமும் நீளமும் ( திருமந்திரம் 95 …)
அன்னோனை இழந்த இவ் உலகம்
என் ஆவதுகொல் ? அளியது தானே ! ( புறம் 217 …)