எம் தந்தை என்னும் வரம்

“Sivan is Never Appealed to in Vain” (சிவனை வேண்டினோர் கைவிடப்படார்) என்பது G.U. போப் அருளியது. இதை என் தந்தையார் தம் வாழ்நாள் கொள்கையாகவே கொண்டிருந்தார். இவருடைய அரும் நண்பர் தமிழ்க்கடல் பண்டித வித்துவான் தி.வே. கோபாலய்யர் எதையும் எப்பொழுதும் “எம்பெருமான் திருவுள்ளம்” என்பார். இதுவே என் தந்தையாரின் மாறாச் சிந்தனை.

பொதுவாக TNR என்று அன்பர்களால் அழைக்கப்பட்டு வந்த சேக்கிழார் அடிப்பொடி முதுமுனைவர் தி. ந. இராமச்சந்திரன் எம் தந்தையார் என்று அமைந்தது எம் முந்தைய பிறவிப் புண்ணியமாய் வந்ததோர் வரப்பிரசாதம். இவரைப் பற்றிச் சில நினைவுகளை இங்குக் கூற மேற்கொள்கின்றேன்.

இவர் பிறந்தது 1934-இல். பிறந்த ஊர் கோனேரிராஜபுரம் எனப்படும் திருநல்லம். பண்டைய கோவில்களில் மிகப் பெரிய நடராஜர் சிலையை உடையது அவ்வூர் ஆலயம்.

தம் தொடக்கக்கல்வியைத் திருவையாற்றில் பெற்ற இவர் திருச்சி ஸெய்ன்ட் ஜோஸஃப் கல்லூரியில் வணிகவியல் பட்டமும் சென்னை சட்டக் கல்லூரியில் வழக்கறிஞர் பட்டமும் பெற்றார். தஞ்சையில் தலைசிறந்த வழக்கறிஞராக விளங்கிய ஆண்டிக்காடு பாலசுப்பிரமணிய ஐயரிடம் பயிற்சியாளராகச் சேர்ந்தார். 1956-ஆம் ஆண்டு இவர் திருமகள் கல்யாணியை மணந்தார். என்னையும் எனக்குப் பிறகு மேலும் மூன்று மகன்களையும் அவர்கள் பெற்றனர்.

இவர் வாழ்க்கை நல்ல நூல்கள், சைவம், மொழிபெயர்ப்புப் பணி என்பனவற்றைச் சுற்றியே அமைந்திருந்தது. வேறெதையும் அவர் முக்கியமானதாகக் கருதியதேயில்லை. மிக இளம் வயதிலிருந்தே நூல்களை வாங்கிச் சேகரிக்கும் பழக்கம் அவருக்கிருந்தது. எந்த ஊருக்குச் சென்றாலும் அங்கு நல்ல புத்தக விற்பனை நிலையங்கள் எங்குள்ளன என்பதையே இவர் முதலில் தேடுவார். வெளியூர் சென்று வரும்போதெல்லாம் தமக்கு மட்டுமன்றி எங்களுக்கும் நூல்களை வாங்கி வருவது அவருடைய மாறாத வழக்கம். இவர் ஊர் திரும்புவதை நாங்கள் ஆவலோடு எதிர்பார்த்திருப்போம். இவரைப் போன்றே எம் நூல்களை வகைபிரித்து வரிசை எண்ணிடும் வழக்கம் எங்களுக்கும் வந்துவிட்டது. பிறந்தநாள் பரிசாக இவர் எமக்களித்ததும் நூல்களையே.

நூல்களை வாங்கித்தருவாரேயன்றி அவற்றைப் படிக்குமாறு எங்களை இவர் வற்புறுத்தியதேயில்லை. வாழும்முறை எதையுமே இவர் வாயால் கூறியதில்லை. மற்றவர்க்கு உபதேசம் செய்யும் வழக்கம் இவருக்குக் கிடையாது. இவர் வாழ்ந்த முறையைக் கண்டே நாங்கள் நல்வழி என்னவென்று கற்றுக்கொண்டோம்.

எங்கள் கல்வியைப் பற்றியும் இவர் கவலைப்பட்டதே கிடையாது. யாரேனும் விசாரித்தால் எங்களைக் கூப்பிட்டுதான் எந்த வகுப்பு என்று வினவுவார். எம் மதிப்பெண்களை இவர் ஒருமுறைகூட விசாரித்ததில்லை. ஒருமுறை நான் வகுப்பில் முதலிடம் பெற்றதை அவரிடம் தெரிவித்தபோது, “இது பெரிய கழுத்தறுப்பு. இதில் மாட்டிக்கொள்ளாதே” என்றார். அதுமுதல் என் மதிப்பெண் பற்றியோ வரிசை இடம் பற்றியோ நான் என்றுமே கவலைப்பட்டதில்லை. அதனால் தேர்வுகள் பற்றிய அச்சம் என்னை என்றுமே பீடித்ததில்லை.

இவர் மொழிபெயர்ப்பு செய்வதைப் பார்த்து நானும் பத்து வயதிலேயே ஆங்கிலக்கதைகளைத் தமிழில் மொழிபெயர்த்தேன். “அதிகப்பிரசிங்கத்தனம்” என்று என்னைக் கேலி செய்யாது அவர் அதைப் பாராட்டி ஊக்குவித்தார். அதன் நற்பயன் இப்போது நான் மேற்கொள்ளும் மொழிபெயர்ப்புப் பணிகளில் எனக்கு ஊக்கமும் தன்னம்பிக்கையும் குறையாது உதவிவருகின்றது. அவ்வாறே என் தம்பி ரமேஷ் ஆலயமீட்புப்பணியில் ஈடுபடுவதற்கும் இவரே பெரும் அகத்தூண்டுதல் ஆவார்.

இவர் காலத்துத் தலைசிறந்த இலக்கியவாணர்கள் அனைவருக்கும் இவர் மிக நெருக்கமான நட்புடன் இருந்தார். தி.வே. கோபாலய்யர், பள்ளியகரம் நீ. கந்தசாமிப்பிள்ளை, கவியோகி சுத்தானந்த பாரதியார், கவி கா.மு. ஷெரிஃப், அவருடைய வழிகாட்டியாக விளங்கிய கவிஞர் திருலோக சீதாராம், ஸ்வாமிநாத ஆத்ரேயன், கரிச்சான் குஞ்சு, பேராசிரியர் அ. சீனிவாசராகவன், பேராசிரியர் K.R. ஸ்ரீநிவாஸ ஐயங்கார், அ.ச. ஞானசம்பந்தம், பாரதி அறிஞர் R. A. பத்மநாபன், பேராசிரியர் M.S. நாடார், தி. ஜானகிராமன், எம்.வி. வெங்கட்ராம், ஜெயகாந்தன், ஒளவை நடராசன், R.E. அ-ஷர், க்ளென் E. யோகும், இந்திரா பீட்டர்ஸன்… இவ்வாறு அடுக்கிக்கொண்டே போகலாம். விடுபட்ட பெயர்கள் பல என்பது நிச்சயம். ய. மணிகண்டன், பேராசிரியர் சங்கரநாராயணன், திருப்பூர் கிருஷ்ணன், தொல்லியல் ஆராய்ச்சியாளர் குடவாயில் பாலசுப்பிரமணியன், சுப்பராயலு போன்ற தனக்குப் பின்வந்த தலைமுறை இலக்கிய, ஆராய்ச்சிப் பேராளர்களிடமும் இவர் மதிப்பும் நட்பும் கொண்டிருந்தார். இவருடன் அரும்நட்பு பூண்டிருந்த பலரும் இவரினும் பல்லாண்டு மூத்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பாரதி படைப்புகள் அனைத்தையும் தேடிப் பதிப்பித்த பேராளர் சீனி. விசுவநாதன் தம் அரும்பணி தொடங்கிய காலந்தொட்டு இவர் அவரை ஊக்குவித்து வந்தார். அவர் பதிப்பித்த நூலொன்றை வாங்கியபோது இவருக்கு அவர் வழங்க முன்வந்த விலைக்கழிவை முறையன்று என இவர் மறுத்துவிட்டார்!

தம் மூன்றாம் மகன் ரமேஷ் ஆலய மீட்புப்பணியில் முழுநேரமும் ஈடுபடத் தொடங்கியதும் வீட்டுக்கொரு போர்வீரன் என்பதுபோல் “நம் குடும்பத்திலிருந்து ஒருவர் சமயப்பணிக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொள்வது சாலச்சிறந்தது” என்று இவர் பெருமிதம் கொண்டார்; அதற்குப் பெருந்தொகையும் வழங்கினார்.

மதுரை சோமு, எம். பாலமுரளிகிருஷ்ணா, A.K.C. நடராஜன், எஸ். ராஜம், ஹரிகதை கமலா மூர்த்தி ஆகிய இசைவாணர்கள் இவருக்கு மிகவும் நெருங்கியவர்கள். வீணை எஸ். பாலசந்தருடன் இவருடைய நட்பு பல பத்தாண்டுகளைக் கடந்து விளங்கியது. மதுரை T.N. சேஷகோபாலனிடம் அன்னாரின் சிறுவயதுமுதல் அவர் பேரன்பு பாராட்டி வந்தார். இதற்கெல்லாம் மேலாக இவர் தேவார இசை வழங்கும் ஓதுவார் பெருமக்களிடம் பெருமதிப்பும் பேரன்பும் காட்டிவந்தார். இசைப்பேரறிஞர் தருமபுரம் சுவாமிநாதனும் இவரும் ஒருவர் மீதொருவர் அலாதியான அன்பு பாராட்டி வந்தனர். தருமபுரத்தாரின் தேவார இசையை அவருடனேயே வீதிதோறும் இரவுமுழுதும் நடந்துசென்று விழிகளில் நீர்சொரிய அனுபவித்தவர் என் தந்தையார். ஓதுவார்களுக்குத் தொடர்ந்து நாங்கள் காணிக்கை செலுத்திவருவது குறித்து இவர் பெருமகிழ்ச்சி கொண்டிருந்தார்.

இவர் சமய இலக்கியத்தில் ஈடுபாடு கொள்ளத் தூண்டுதலாக இருந்தவர்கள் சுகப்பிரமம் ராமஸ்வாமி சாஸ்திரிகளும் எம்பார் விஜயராகவாச்சாரியாரும் ஆவர்.

திருலோக சீதாராம் இவருடன் காலந்தோறும் நடத்திவந்த “தேவசபை” என்னும் அன்பர் கூட்டம் உபநிடதங்களை அவற்றின் மூலத்தினின்று ஆராய்ந்து மெய்ப்பொருள் கண்டது.

சைவத்திருமடங்கள், காஞ்சிமடம், தயானந்த சரஸ்வதி ஸ்வாமிகள், தவத்திரு ஊரன் அடிகள் ஆகியோர் இவரிடம் பேரன்பும் பெருமதிப்பும் பாராட்டினார்கள். பொள்ளாச்சி மகாலிங்கம் அவர்கள் இவருடைய நூல்கள் இரண்டைப் பதிப்பிக்க ஆவன செய்து உதவினார்.

தருமையாதீனம் இவருக்கு “சைவ சித்தாந்த கலாநிதி” என்னும் பட்டமளித்துச் சிறப்பித்தது.. பாரதி மொழிபெயர்ப்புப் பணிக்காக முதல்வர் எம்ஜிஆர், முதல்வர் கருணாநிதி ஆகிய இருவரிடமும் இவர் அரசு விருது பெற்றார். மேலும் பல பட்டங்களையும் விருதுகளையும் பெற்ற இவர் “சேக்கிழார் அடிப்பொடி” என்னும் தம் பட்டத்தையே அனைத்தினும் மேலாகப் போற்றிப் பெருமிதம் கொண்டார்.

வேதாந்தத்தைப் போற்றும் ஸ்மார்த்த அந்தண மரபில் வந்த இவர் சைவசித்தாந்தத்தைச் சிரமேற்கொண்டு அதில் ஆழங்காற்பட்டு அதற்கு அரும்பணியாற்றினார்.

இவரது சைவ, தமிழ்ப்பணிகளைப் பாராட்டி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் இவருக்கு முதுமுனைவர் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது. அத்தகைய நிகழ்ச்சிக்கு யாரும் நேரில் செல்லாது பதினைந்தாண்டுகளுக்குப் பின்னர்- ஈழப்போரின் உச்சகட்ட காலத்தில்- இவர் எம் தாயாருடன் யாழ்ப்பாணம் சென்று அதைப் பெற்றுக்கொண்டார். அப்போது ஐந்து நாட்களில் இருபத்தைந்து சொற்பொழிவுகளை அப்பகுதியில் இவர் ஆற்றினார். அனாதை இல்லம் ஒன்றுக்குச் சென்றிருந்தபோது அச்சிறார்களிடம் “அனாதைகள் என்று உங்களை எண்ணி வருந்தாதீர்கள். நம் அனைவர்க்கும் இறைவனாகிய அம்மையப்பனே அனாதைதான்” என்று அவர்களுக்கு ஆறுதல் கூறினார். “உண்மையான தமிழர் இலங்கைத்தமிழரே” என்று அப்போது முடிவுமேற்கொண்டார்.

இவரது சொற்பொழிவு, இலக்கிய, மொழிபெயர்ப்புப் பணிகளை விரித்துக்கூற தனியே ஒரு கட்டுரை தேவைப்படும். விரிவஞ்சி அதை ஈண்டு விடுக்கின்றேன்.

தம் உயிரினும் மேலாகப் போற்றிப் பாதுகாத்த தம் மிகப்பெரிய நூலகம் இறுதியில் தஞ்சை சாஸ்த்ரா பல்கலைக்கழகத்திடம் சென்றடைந்ததும் அது தம்மை நீங்கியதற்குச் சிறிதும் வருந்தாது அது நல்லிடம் சேர்ந்ததற்குப் பெருமகிழ்ச்சியோடு அமைந்தார் இவர்.

“எந்நிலையில் நின்றாலும் எக்கோலம் கொண்டாலும்
மன்னிய சீர் சங்கரன் தாள் மறவாமை பொருள்”
என்பதைத் தம் வாழ்நாள் முழுதும் கடைப்பிடித்துவந்த இவர் காட்டிய வழியில் இயன்றவரை தொடர்ந்து இவருக்கு எம் அஞ்சலி செலுத்த இறையருளை வேண்டுகின்றோம்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *