மூதறிஞருக்கு அஞ்சலி!

1997ம் ஆண்டு, நான் நெல்லை ஆரெம்கேவியில் பணியாற்றிக் கொண்டிருந்தேன். அப்போதைய திருமலை மில்ஸ் உரிமையாளர்களில் ஒருவரான திருஞானசம்பந்தம் ஐயா, என்னை அலுவலகத்திற்கு அழைத்தார். நேரில் சென்ற உடன், என்னிடம் ‘தேவாரம் வேதசாரம்’ என்ற நுாலை அன்பளிப்பாக தந்தார்.

1992ம் ஆண்டு என் பாட்டி வீட்டில் நான் கண்டெடுத்த ஆறுமுக நாவலரின் சைவ வினா விடை என் சிந்தனைப் போக்கையும் வாழ்க்கையையும் மாற்றியமைத்தது. அதேபோல் சைவத்தின் மீதான ஆழ்ந்த ஈர்ப்பிற்கு காரணமானது தான் காசிவாசி செந்திநாதையரின் ‘தேவாரம் வேதசாரம்’.

அப்போது அந்த நுாலை வெளியிட்ட டி.என்.ஆர். பற்றி எனக்கு ஒன்றும் தெரியவில்லை. நாளாவட்டத்தில் அவரைப் பற்றி தெரிந்த பின்னர் நேரில் சந்திக்க வேண்டும் என்ற ஆசை மிகுந்தது

பின்னர் அவரது தொலைபேசி எண்ணைப் பெற்று, பேசினேன். முன்பின் அறிமுகம் இல்லை என்றாலும் அன்போடும் கனிவோடும் பேசினார். அப்போது குடவாயில் பாலசுப்பிரமணியன் எழுதிய கோபுரக் கலை என்ற நுால் வெளிவந்திருந்த சமயம். அதை அனுப்ப முடியுமா என்று கேட்டிருந்தேன். உடனடியாக தபாலில் அனுப்பித் தந்தார்.

2007 அல்லது 2008ம் ஆண்டு என்று நினைக்கிறேன். விஜயபாரதம் தீபாவளி மலருக்காக, குடந்தை நாகேஸ்வரத்தில் உள்ள ராமாயண சிற்பங்கள் குறித்தும், குடவாயில் பாலசுப்பிரமணியனிடம் ஒரு பேட்டிக்காகவும் தஞ்சை சென்றிருந்தேன்.

குடவாயிலாரை சந்தித்து பேட்டி எடுத்து விட்டு, செல்வம் நகரில் டிஎன்ஆரின் வீடு தேடிக் கொண்டு உச்சிவெயிலில் சென்றேன். முகம் நிறைய புன்னகையுடன் வரவேற்றவர், வராந்தாவில் உள்ள ஊஞ்சலில் அமர்ந்து கொண்டார். நான் எதிரே அமர்ந்திருந்தேன்.

சின்னப் பையன் தானே என்று நினைக்காமல் நான் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் பதிலளித்தார். பின்னர் அவரது நுால் சேகரிப்பு குறித்து பேச்சு திரும்பியது.

தான் சேகரித்து வைத்த நுால்களை ஒரு குழந்தையின் உற்சாகத்தோடு அவர் எனக்கு காண்பித்த அந்தக் காட்சி இப்போதும் நெஞ்சில் நிழலாடுகிறது. குரான் மட்டும் 10க்கும் மேற்பட்ட பல்வேறு பதிப்புகள் வைத்திருந்ததாக நினைவு.

2012ம் ஆண்டு நித்யானந்தா, மதுரை ஆதீனத்தில் புகுந்திருந்த நிலையில், அது தொடர்பாக, அப்போதைய திருப்பனந்தாள் இளவரசு ஸ்ரீமத் சுந்தரமூர்த்தி தம்பிரான் சுவாமிகளிடம் அடிக்கடி பேசிக் கொண்டிருந்தேன். அப்போதுதான் அவர், டிஎன்ஆரின் 3வது தனயர், டிஆர். ரமேஷை அறிமுகம் செய்து வைத்தார்.

அதுமுதல் இப்போது வரை அவரது நட்பு வட்டத்தில் இருந்து வருகிறேன். 2015 அல்லது 2016ம் ஆண்டு, மேற்கு மாம்பலத்தில், மூத்த மகனின் வீட்டில் டிஎன்ஆர் தங்கியிருந்தார். அப்போது எனது கோரிக்கையின் பேரில் டிஆர் ரமேஷ் அங்கு அழைத்துச் சென்றிருந்தார்

எனது சில சந்தேகங்களுக்கு விடையளித்தவர், மறைமலையடிகள் குறித்து பல செய்திகளைக் கூறி விளக்கம் தந்தார். அதன்பின் டிஎன்ஆரை சந்திக்க வாய்ப்பு கிடைக்கவில்லை

ஒரு தனிமனிதராக, சைவ உலகிற்கு அவர் செய்த தொண்டுகள் சொல்லி முடியாதன. அமைப்புகள், திருமடங்கள் செய்ய வேண்டிய வேலைகளை தனது தெய்வச்சேக்கிழார் சைவ சித்தாந்த பாடசாலை என்ற அமைப்பின் பெயரில் தனியராக செய்தவர்

எண்பது, தொண்ணுாறு ஆண்டுகளுக்குப் பின் காசிவாசி செந்திநாதையரின் தேவாரம் வேதசாரம், நீலகண்ட பாடியம், சைவ வேதாந்தம் ஆகிய நுால்களையும், மறைமலையடிகள் எழுதி ஒருமுறை மட்டுமே அச்சான வேதாந்த மதவிசாரம் என்ற நுாலையும் அவர் வெளியிட்ட பணி மிக முக்கியமானது

வைதிக சைவத்திற்கு எதிராக எழுந்த தமிழ்ச் சைவத்தை விமர்சிக்கும் போக்கில் அவர் செய்த பணி அது. இந்த நுால்களின் பதிப்புரையில் செறிவான விமர்சனங்களையும் முன்வைத்திருப்பார்.

அதேநேரம் யாராக இருந்தாலும் அவர்களிடம் அன்பு பாராட்டும் கனிந்த மனம் கொண்டவர். டிஎன்ஆர் என்று சொன்னாலே போதும், அவர் ஒரு மனிதரையா என்பார் பொ.வேல்சாமி. கொள்கைச் சார்பால் மனிதர்களை வெறுக்காமல் நேசிப்பது எப்படி என்பதை இவரிடம் கற்றுக் கொள்ள முடியும்.

வேதாந்தத்தை பின்பற்றும் பிராமணக் குடும்பத்தில் பிறந்த டிஎன்ஆர், சைவ சித்தாந்தத்திற்காக தனது வாழ்நாளை அர்ப்பணித்தவர். எந்த நிலையிலும் தனது சைவப் பற்றை விட்டுக் கொடுக்காதவர்; விட்டு நெகிழாதவர்.

தனக்கு எத்தனையோ பட்டங்கள் கிடைத்தாலும், விருதுகள் கிடைத்தாலும் அவை எல்லாவற்றையும் விட தன்னை ‘சேக்கிழார் அடிப்பொடி’ என்ற பெயருடன் அழைப்பதையே தம் வாணாள் முழுவதும் விரும்பியவர்.

கம்பனுக்கு ஒரு டிகேசி என்றால், சேக்கிழாருக்கு ஒரு டிஎன்ஆர். சேக்கிழாரை அணுஅணுவாக ரசித்ததோடு மட்டுமின்றி அவரை தான் வாணாள் முழுவதும் பரப்பி வந்தவர்.

பிராமணர்கள் என்றாலே வெறுக்கும் தமிழ்ச் சைவர்களையும் அவர் நேசித்தவர் தான். மறைமலையடிகளின் தனிப்பட்ட சாதனைகளைச் சொல்லி சிலாகித்தபோது அதை நான் உணர்ந்தேன்.

சிவம் என்றால் அன்பு; அதை வாழ்வில் கணந்தோறும் உணர்ந்து பிறருக்கு உணர்த்தி வந்தவர் டிஎன்ஆர்.

அவரது வாழ்வு நிறைவாழ்வு; அந்த வாழ்வில் இருந்து சைவ உலகம் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய உள்ளது.

https://nellaichokkar.blogspot.com/2021/04/blog-post.html?fbclid=IwAR1rE0XPIiLiLgqv5WrmMfAGFaZxoAKSBjfyJ5pxWjVbSg5eab-zctyC72Q

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *