சேக்கிழார் அடிபொடி தி.ந.இராமச்சந்திரன் நேற்று (6-4-21) சென்னையில் காலமானார்.
திருலோக சீதாராம் ‘சிவாஜி’ என்ற பத்திரிகை ஒன்றை நடத்தினார். அப்போது அதற்குப் பெரியபுராணத்தின் ஒரு பகுதியை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துக் கொடுத்தார் ஓர் இளைஞர். அப்போது அவரிடம் சிலர், ‘சைவசித்தாந்தம் தெரியுமா?’ என்ற கேள்வியை முன்வைத்தனர். அதற்கு அந்த இளைஞர் ‘தெரியாது’ என்று மிகவும் வெளிப்படையாகக் கூற, சைவ சித்தாந்தம் தெரியாமல் பெரியபுராணத்தை மொழிபெயர்ப்பது சரியல்ல என்று கருத்துத் தெரிவித்தனர். அந்தக் கேள்வியை மிகவும் சரியாகப் புரிந்துகொண்டு சைவ சித்தாந்தம் படிக்கத் தொடங்கிய அந்த இளைஞரின் வாழ்வு அதன்பின் சைவத்தொண்டாற்றும் வாழ்வாக மாறிப்போனது.
தமிழையும் சைவத்தையும் தன் வாழ்நாள் முழுவதும் பெருமைப்படுத்திக்கொண்டே இருந்த அந்த மாமனிதர் வேறு யாருமல்ல, தி.ந.இராமச்சந்திரன். சேக்கிழார் அடிபொடி என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்டு தமிழ் உலகின் அறிஞர்கள் மற்றும் அன்பர்கள் அனைவராலும் நேசிக்கப்பட்ட தி.ந.இராமச்சந்திரன் நேற்று (6.4.21) உடல் நலக்குறைவு காரணமாக தன் 87வது வயதில் காலமானார்.
தில்லை நடராஜன் இராமச்சந்திரன் என்னும் டி.என்.ஆர் (தி.ந.ரா) 1934-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 18-ம் தேதி பிறந்தார். வாசிப்பில் ஆர்வமுள்ளவராக இருந்த தி.ந.ரா, சுகப்பிரம்மம் ராமசாமி சாஸ்திரிகள் என்பவரின் பெரியபுராணச் சொற்பொழிவுகளைக் கேட்டு அதன் மீது பெரும் ஈடுபாடு கொள்ள ஆரம்பித்தார். அது அவரைப் பெரியபுராணத்தின் மீது ஆழங்கால் பட்ட அறிவை நோக்கி இட்டுச்சென்றது.
சட்டக் கல்வி பயின்று 1956 ம் ஆண்டு முதல் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றியவர் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு அந்தப் பணியை உதறிவிட்டு சைவப்பணியிலும் தமிழ்ப்பணியிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார். இவரது திருமுறைகள் ஆங்கில மொழிபெயர்ப்பு மிகவும் முக்கியமானவை. அதற்கு முன்பாக ஜி.யூ.போப் திருவாசக மொழிபெயர்ப்பைச் செய்திருந்தாலும் தி.ந.ரா-வின் மொழிபெயர்ப்பு மிகவும் செம்மையும் செழுமையும் வாய்ந்த ஒன்றாக அமைந்தது. இவரது பெரியபுராணம் திருமுறைகளின் கவசம், பாரதி பாடல்கள் சிந்தனை விளக்கம் ஆகிய நூல்கள் மிகவும் குறிப்பிடத்தக்கவை. பாரதியின் பாஞ்சாலி சபதத்தை மிகவும் ஈடுபாட்டோடு அற்புதமாக ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.
இவர் தமிழுக்கும் சைவத்துக்கும் ஆற்றிய தொண்டினைப் போற்றித் தருமபுரம் ஆதீனம் ‘சைவசித்தாந்த கலாநிதி’ என்ற பட்டத்தை வழங்கிக் கௌரவித்தது. யாழ் பல்கலைக்கழகத்தில் பெரிய புராணத் தொடர் சொற்பொழிவு நடத்தினார். இதையொட்டி அவருக்கு முதுமுனைவர் என்ற பட்டமளித்து கௌரவித்தது பல்கலைக்கழகம். சேக்கிழார் அடிபொடி என்னும் பட்டமும் இவரைச் சேர்ந்தது. சைவத்தின் மீது கொண்டிருந்த ஈடுபாட்டைப்போலவே தமிழ் மீதும் மாபெரும் அபிமானம் கொண்டவராக விளங்கினார் டி.என்.ஆர்.
ஒருமுறை அவரிடம்,சமஸ்கிருதத்தைத் தேவபாஷை என்கிறார்களே, அப்படியெனில் பக்தி இலக்கியங்களை மேடைதோறும் முன்னெடுக்கும் தமிழறிஞரான நீங்கள் தமிழை என்னவென்பீர்கள்?’ என்றதும், சற்றும் யோசிக்காமல்
சமஸ்கிருதம் தேவபாஷை எனில், தமிழே மகாதேவ பாஷை’ என்று பதில் கூறினாராம். அந்த அளவுக்கு இவரின் மொழி மீதான பற்று அலாதியானது.
தி.நா.ராமச்சந்திரன் குறித்து ஆவணப்படம் ஒன்றை தயாரித்திருக்கிறார் ரவிசுப்பிரமணியன். அவரிடம் டி.என்.ஆர் குறித்துக் கேட்டோம்.
“ஐயா ராமச்சந்திரன் அவர்கள் பார்த்தாலே கவர்ந்திழுக்கும் ஆளுமை கொண்டவர். சிவந்த மேனி, நெற்றியில் திருநீறு, உதட்டில் அவ்வப்போது தரிக்கும் தாம்பூலத்தில் சிவப்பு எனப் பார்க்கவே சிவப்பழம் போலக் காணப்படக்கூடியவர். தமிழ் ஆங்கிலம் ஆகிய இருமொழிகளிலும் அவரின் அறிவு அபாரமானது. கவிஞர், கட்டுரையாளர், மொழிபெயர்ப்பாளர், சொற்பொழிவாளர் எனப் பன்முகை ஆளுமைகொண்ட பக்தி இலக்கியச் செம்மல். அவரிடம் நீங்கள் ஷேக்ஸ்பியர் பற்றியும் பேசலாம் மில்டன் குறித்தும் பேசலாம் சைவ சித்தாந்தமும் கேட்கலாம். வைணவம் குறித்தும் உரையாடலாம். வடமொழி பற்றியும் பேசலாம் தமிழ் இலக்கியங்கள் குறித்தும் விவாதிக்கலாம். இப்படிப் பல்துறை அறிவின் குவிப்பாக நடமாடியவர் தி.நா.ராமச்சந்திரன். அவரை அணுகுவது மிக எளிது. எல்லோரையும் அன்போடு அணுகும் மனிதர் அவர்.
சைவமும் வைணவமும் ஒரே மரத்தின் இரு கிளைகள் என்பார். எனவே இரண்டும் வேறு வேறல்ல என்பது அவர் கருத்து. அவருக்கு சைவம் குறித்து எடுத்துரைத்த பல அறிஞர்கள் வைணவர்கள் என்பதை அவரே தெரிவித்திருக்கிறார். அதுபோலவே அவருக்கு சாதி வேற்றுமைகளும் கிடையாது.
சைவத்தைப்போலவே தமிழ்மீதும் தீராத பற்றுகொண்டவர். திருமுறை வகுப்புகளைத் தன் கடமையாக எடுத்து வந்தவர். தஞ்சாவூர் திருவையாறு ஆகிய இடங்களில் தேவார திருவாசக வகுப்புகள் எடுப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். எத்தனைபேர் வருகிறார்கள் என்கிற கணக்கெல்லாம் கிடையாது. யார் வந்தாலும் வராவிட்டாலும் அவர் வகுப்பெடுக்க ஆரம்பித்துவிடுவார். இதில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது என்னவென்றால் அதை வெறும் பாடலாக பாடமாக நடத்த மாட்டார். அதனுள் தோய்ந்து ஓர் அனுபவப் பெருக்காக உணர்வுப்பூர்வ நிலையிலேயே வகுப்பை எடுப்பார். அதைக் கேட்கும் மாணவர்களுக்கு சிலிர்க்கும். அவரோ சிவானந்தப் பெருவெள்ளத்திலேயே மிதப்பார். சில நேரங்களில் அவற்றுக்குப் பொருள் சொல்லும்போது பேரானந்தத்தில் மூழ்கித் தன் நிலை மறந்து அழுதுவிடுவார். அந்த கணம் மாணவர்கள் மனதுக்குள் அந்தப் பதிகமும் காட்சியும் பசுமரத்தாணிபோலப் பதிவாகிவிடும். தமிழ் இலக்கிய வாதிகள் பலரோடும் அவருக்கு நட்பு இருந்தது. திருலோக சீத்தாராம் இவருக்கு வழிகாட்டியாக விளங்கியவர்.
இப்படித் தமிழுக்காகவும் சைவத்துக்காகவும் வாழ்ந்த ஒரு மனிதர் இறந்துவிட்டார் என்பது மிகவும் வருத்தத்தைத் தருகிறது” என்று உணர்வுபூர்வமாகப் பேசினார் கவிஞர் ரவிசுப்பிரமணியன்.